விஜய்யால் MGR கிட்ட கூட போக முடியாது.. இந்த ஒரு சம்பவம் அதுக்கு சாட்சி.. முக்கிய புள்ளி சொன்ன தகவல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். இரண்டாவது மாநாடு வரை தனது கொள்கைத் தலைவர்களை மட்டும் முன்னிருத்திய விஜய், இரண்டாவது மாநாட்டில் இருந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணாதுரை மற்றும் மக்கள் திலகம் MGR ஆகியோரின் புகைப்படங்களுடன் தனது புகைப்படத்தை சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் ஒரு மாதம் தனது வீட்டிலேயே முடங்கிக் கிடந்த விஜய், கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து, அவர்களைத் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இப்படி இருக்கையில் கடந்த 1982 முதல் 1985 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த, வி.எஸ். சந்திரலேகா அளித்துள்ள பேட்டியில் விஜய்யால் MGR கிட்ட கூட போக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், " 1972ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்ட ஆண்டில் திண்டுக்கல்லுக்கு அருகில், நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியம் என்ற இளைஞர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரழந்துவிடுகிறார். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு கொடைக்கானலில் நிறுவப்பட்ட அன்னை தெரசா மகளிர் பல்கலை கழகத்தை திறந்து வைக்க வந்த போது, மதுரையில் இருந்து காரில் கொடைக்கானலுக்கு செல்கிறார். அவருடன் நானும் செல்கிறேன். திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியை நெருங்கியதும் 1972ஆம் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போன சுப்பிரமணியத்தை நினைவு கூர்ந்து என்னிடத்தில் சொன்னார் MGR .
அதன் பின்னர் அவர்களது குடும்பத்தினரை எப்படியாவது கண்டுபிடித்து, அவர்களுக்கு ஏதாவது தேவைகள் இருந்தால் அதை அரசு திட்டத்தின் மூலம் செய்ய முடியும் என்றால் செய்யுங்கள், இல்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள் நான் தனிப்பட்ட முறையில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். MGR இப்படிச் சொன்னதும் எனக்கு ஒரு சந்தேகம், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கேட்கிறாரே? இத்தனை ஆண்டுகளாக அவர் எதுவுமே செய்யவில்லையா என்று நான் நினைத்துக் கொண்டேன்.

அன்னை தெரசா பல்கலைக்கழகம்: அதன் பின்னர் பல்கலைக் கழகத்தை திறந்து வைக்க நான் வரவில்லை, கலெக்டராக நீங்களே அன்னை தெரசா அவர்களை அழைத்து திறந்து வையுங்கள் என்று கூறினார். இப்படி இருக்கும்போது, நான் மேடைக்குச் செல்லும்போது காவலர் ஒருவர் ஒரு பெண்ணை நோக்கி முதலமைச்சரை எல்லாம் பார்க்க முடியாது, போ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது என் காதில் பட்டதும் என் மனதுக்குள் அந்த பெண் யாரென்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அந்த பெண்ணிடம் விசாரித்தால், அந்த பெண் இறந்து போன சுப்பிரமணியத்தின் மனைவி.
நன்றி: இதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம். எதற்காக முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று கேட்டதற்கு, நானும் எனது குழந்தையும் நன்றாக இருக்கிறோம். முதலமைச்சர் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்கிறார். அதற்கு நன்றி சொல்லத்தான் வந்தேன் என்று கூறினார். உடனே நான் முதலமைச்சரிடம் அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் அழைத்துச் சென்றேன். அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார்கள்.

மனமுடைந்த எம்.ஜி.ஆர்: அதன் பின்னர் நான் MGR-ஐ நோக்கி," ஏன் சார் நீங்க தான் எல்லாமே அவர்களின் குடும்பத்திற்கு செய்து வருகிறீர்களே, அப்படி இருந்தும் என்னிடத்தில் ஏன் அவர்கள் குறித்து விசாரிக்க சொன்னீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் அவர்களுக்கு எல்லா வசதிகளும் உருவாக்கித் தந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அவரது கணவரை என்னால் கொடுக்க முடியாது அல்லவா, நான் எவ்வளவு செய்தாலும் அது அந்த பெண்ணின் கணவனுக்கு ஈடாகுமா என்று மனமுடைந்து சொன்னார்" என்று கூறினார்.
யார் தலைவர்: MGR தான் தலைவர், என்றைக்கோ இறந்து போன தனது தொண்டனை நினைத்துக் கொண்டு, அவரது குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்தாரே அவர் தலைவர். ஆனால் இன்றைக்கு இறந்தவர்களின் குடும்பத்தை தன்னைப் பார்க்க வரவழைத்து துக்கம் விசாரிப்பவர் எல்லாம் தலைவரா என்று கேட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











