சாய்பாபா மறையவில்லை, ஆத்மா ஆசிரமத்தில் உலவுகிறது: நடிகை அஞ்சலி தேவி

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி சாய்பாபாவின் தீவிர பக்தை. கடந்த 48 ஆண்டுகளாக புட்டபர்த்தி ஆசரமம் வந்து செல்லும் அவர் நேற்று முன்தினம் சாய்பாபா சமாதியில் வழிபட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது,
புட்டபர்த்தி வந்தால் மன வேதனை நீங்கி அமைதியாகிவிடும். நான் ஒரு இந்தி படம் எடுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் என் நிம்மதி போனது.
அப்போது தான் நடிகர் நாகையா என்னை புட்டபர்த்திக்கு அழைத்து வந்தார். சாய்பாபாவிடம் ஆசி பெற்றேன். அதன் பிறகு என் வாழ்க்கை நல்லவிதமாக மாறிவிட்டது. பல நல்ல சம்பவங்கள் நடந்தன. என் கஷ்டமெல்லாம் நீங்கியது.
அதனால் தான் சாய்பாபாவுக்கு கோடிக்கணக்கான பக்தைகள் உள்ளனர். தமிழகத்தில் கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை கூறுவார்கள். ஆந்திராவில் பலருக்கு கல்வி வழங்கி வருவது பாபா தான். அவரது கல்வி சேவை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது.
இது தவிர குடிநீர், மருத்துவ சேவைகளும் செய்து வருகிறார். பாபாவிடம் பணம் இருந்தால் அது நல்ல காரியத்திற்கு தான் செலவிடப்படும் என்று அனைவரும் நம்புகின்றனர். அதனால் தான் தொழில் அதிபர் ரத்தன் டாடா முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் வரை பாபா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குகின்றனர்.
சாய்பாபா மறையவில்லை, அவர் சமாதியில் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார். அவரது ஆத்மா புட்டபர்த்தி ஆசிரமத்தில் தான் உலவுகிறது. பாபா செய்த சேவையை தொடர வேண்டும் என்று நான் அறக்கட்டளையை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











