நாங்க 3 பேரும் பேயை பிரிச்சிக்கிட்டோம்.. சுந்தர் சி, லாரன்ஸ் பேய் படங்கள் குறித்து சந்தானம் ஓபன்!
சென்னை: வரும் மே 16ம் தேதி சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் காலம் காலமாக பேய் படங்கள் உருவாகி வெளியாகி வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த காலத்திலேயே ஜெகன்மோகினி வகையறா பேய் படங்கள் ஏகப்பட்ட ரசிகர்களை தியேட்டர்களுக்கு அழைத்து வந்தன.
ஷாக், 13பி உள்ளிட்ட பேய் படங்கள் ஹாலிவுட் பேய் படங்கள் போல ரொம்பவே சீரியஸாக இருந்து வந்த நிலையில், பேயை வைத்து ஸ்க்ரீம் பட பாணியில் காமெடியுடன் எடுக்க முடியும் என ராகவா லாரன்ஸ் முனி படத்தின் மூலம் புதிய டிரெண்டை தமிழில் கொண்டு வந்தார்.
ஒரு பக்கம் காஞ்சனா சீரிஸ் பேய் படங்களை ராகவா லாரன்ஸ் பயம் மற்றும் காமெடியுடன் எடுக்க, இன்னொரு பக்கம் சுந்தர். சி பக்தி, பயம் மற்றும் கிளாமருடன் அரண்மனை சீரிஸ் படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

இவர்களை தாண்டி நடிகர் சந்தானமும் தில்லுக்கு துட்டு படத்தில் இருந்து தொடர்ந்து பேய் மற்றும் காமெடி படங்களில் நடித்து கலக்கி வருகிறார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்காக தீவிரமாக புரமோஷன் செய்து வரும் சந்தானம் மூவர் எடுக்கும் பேய் படங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை அழகாக கூறியுள்ளார்.
சந்தானம் படத்துக்கு சிக்கல்: பொதுவாக விஜய் படங்கள் வெளியானால் தான் அரசியல் சிக்கல் உருவாகும் என்கிற நிலைமை தாண்டி தற்போது சந்தானம் படத்துக்கே சனாதன சிக்கல் உருவாகியுள்ளது. பவன் கல்யாணின் ஜன சேன கட்சி நிர்வாகி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற "கோவிந்தா" பாடல் திருப்பதி ஏழுமலையனின் பக்தி பாடலை கிண்டல் செய்யும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், அந்த பாடல் படத்தில் இடம்பெற்றால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

சந்தானம் பேட்டி: ராம் பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 படங்களில் நடித்த சந்தானம் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டர்ன்ஸ், டிடி நெக்ஸ்ட் லெவல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த முறை விமர்சனம் செய்யும் நபரை பேயான செல்வராகவன் படத்துக்குள்ளே விட்டு சோதிக்க அங்கிருந்து சந்தானம் எப்படி தப்பித்து வருகிறார் என்பது தான் கதை என்பது படத்தின் டிரெய்லரிலேயே தெளிவாக தெரிகிறது. படத்தின் புரமோஷனை முன்னிட்டு தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கும் மீடியாக்களுக்கும் பேட்டி அளித்து வரும் சந்தானம் பல விஷயங்களை தனது பாணியில் காமெடியாக பேசி வருகிறார்.
சுந்தர். சி, லாரன்ஸ், சந்தானம் பேய் படங்கள்: தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான பாகங்களை எடுப்பது யார் என்கிற போட்டி நிலவுகிறது. ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு பக்கம் காஞ்சனா 4ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். சுந்தர். சி அரண்மனை 4ம் பாகத்தை இயக்கி ஹிட் கொடுத்து அடுத்ததாக அரண்மனை 5 படத்தை உருவாக்க காத்திருக்கிறார். டிடி நெக்ஸ்ட் லெவல் மூலம் தில்லுக்கு துட்டு வரிசையில் 4வது பேய் படமாக சந்தானம் ஒரு பேய் படத்தைக் கொடுக்க உள்ள நிலையில், மூவருக்கும் உள்ள வேறுபாடு குறித்து சந்தானம் பேசியுள்ளார்.

பேயை பிரிச்சிக்கிட்டோம்: ரொம்ப அழுது ஹெல்ப் கேட்கிற பேய் என்றால் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கிட்ட அனுப்பிடுவோம். ரொம்ப எமோஷனலான பேய் என்றால் சுந்தர். சி சார் கிட்ட அனுப்பிடுவோம். ஜாலியா கலாய்ச்சிக்கிட்டு இருக்க பேய் மட்டும் நான் வச்சிக்கிறேன் என தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார் சந்தானம். சூரியின் மாமன், யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க படத்துடன் போட்டிப் போடும் சந்தானத்துக்கு வெற்றி கிடைக்குமா என்பது மே 16ம் தேதி தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











