கார்த்தி திறமைசாலி.. நிச்சயம் ஒரு நாள் ‘அந்த’த் தொப்பி போடுவார்.. சொல்வது சாயிஷா - exclusive
கார்த்தி ஒருநாள் இயக்குநர் ஆவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் நடிகை சாயிஷா.
சென்னை: நடிகர் கார்த்தியை நிச்சயம் ஒரு நாள் இயக்குநர் ஆவார் எனத் தெரிவித்துள்ளார் அவருடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த சாயிஷா.
வனமகன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சயிஷா, தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். கார்த்தியின் ஜோடியாக அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ஜுங்கா படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. இது தவிர அடுத்த வாரம் ஆர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள கஜினிகாந்த் படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் கிராமத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடைக்குட்டி சிங்கம் வெற்றி... எப்படி இருக்கு இந்த ஃபீல்...
உண்மையில் ரொம் சந்தோஷமாக இருக்கிறேன். இது எனது இரண்டாவது படம் தான். ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் போது நான் ஆரிவதிக்கப்பட்டவளாகவே உணர்கிறேன். படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நகரத்தில் பிறந்த வளர்ந்த நீங்கள், கிராமத்து பெண்ணாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பின் போதுதான் நான் முதன்முதலில் கிராமத்துக்கே சென்றேன். ரொம்ப கஷ்டம் தான். இயல்பாகவே நான் ஒரு குடும்பப் பாங்கான பெண். அதனால் கிராமத்து பெண் வேடத்தை ஏற்று நடிப்பது கடினமாக இல்லை. ஆனால் இது ஒரு புது அனுபவமாக இருந்தது. இயக்குனர் பாண்டிராஜ் கிராமத்து பின்னணியை கொண்டவர்கள் என்பதால், எங்களை எளிதாக வேலை வாங்கினார்.

கார்த்தியுடன் நடித்த அனுபவம் பற்றி..
கார்த்திக் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் நடிக்கும்போது, நாமாகவே நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். ஏனென்றால் அவர் எதிரில் இருக்கும்போது, இயல்பாகவே அவரது நடிப்பு மூலம் நம்மையும் மெருகேற்றி விடுவார். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு நல்ல மனிதர். பிறருக்கு உதவுவதிலும் சரி, மற்றவர்களை அரவணைத்துச் செல்வதில் சரி அவர் சிறந்தவர்.

இயக்குநர் :
நிச்சயம் ஒருநாள் அவர் இயக்குநர் ஆவார். ஏனெனில் அந்தளவிற்கு அவர் திறமைசாலி. ஒரு கதையைத் தேர்வு செய்வது, அதை நுட்பமான முறையில் கையாளுவது என அனைத்தையும் நேர்த்தியாக செய்பவர் கார்த்தி.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறீர்கள். ஆனால், இன்னும் தமிழ் கற்றுக் கொள்ளவில்லையா..?
தமிழில் எனக்கு நல்ல பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது. அதனால் இங்கு தான் என் கவனம் இருக்கிறது. இப்போது எனக்கு தமிழில் பேசுவது புரிகிறது. விரைவில் தமிழில் பேசவும் ஆரம்பித்து விடுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்ப் பேச கற்று வருகிறேன்.

யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை..?
பிரபுதேவா சார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சிறு வயதில் இருந்தே நடனம் கற்று வருகிறேன். எனக்கு 10க்கும் மேற்பட்ட வகை நடனம் தெரியும். அதனால் முழு நீள நடனப் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.


Click it and Unblock the Notifications











