Exclusive: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அடுத்து யாரு?.. போதைப் பொருள் விவகாரம் அடுத்த நகர்வு என்ன? சிவபாலன் பேட்டி!
சென்னை: நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா அடுத்தடுத்து கைதான நிலையில், போதைப் பொருள் விவகாரம் கடந்த வாரம் பெரிதளவில் தமிழ் சினிமாவில் சூடு பிடித்தது. அடுத்ததாக இந்த வழக்கில் மூன்று எழுத்து நடிகர் சிக்கப் போகிறார் என்றும் பிரபல நடிகைகள் மாட்டப் போகிறார்கள் என்றும் ஏகப்பட்ட ஊகங்கள் கிளம்பின. இந்நிலையில், இதற்கு மேல் எல்லாம் இந்த வழக்கு பெரிதாக சூடு பிடிக்காது என்றும் பிரபலங்கள் பக்காவாக விஷயங்களை ஆஃப் செய்து விடுவார்கள் என்றும் பத்திரிகையாளர் சிவபாலன் பேட்டியளித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய விவகாரத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையமான நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா அடுத்தடுத்து கைதானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், நடிகர் ஸ்ரீகாந்த் முதன்முறையாக ரத்த பரிசோதனை செய்யப்பட்டு அவர் போதைப் பொருள் உட்கொண்டது உறுதியான நிலையில், தெரியாமல் செய்துவிட்டேன் என்றும் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு பதில் போதைப் பொருட்களை கொடுத்து அடிமையாக்கி விட்டனர் என்றும் தனது நிலைமையை வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார்.
வசமாக சிக்கிய ஸ்ரீகாந்த்: பிரசாத் மற்றும் பிரதீப் என போதைப் பொருள் வழக்கில் போலீசார் பிடியில் சிக்கியவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட 2 பெயர்கள் மட்டுமே வெளியே கசிந்தன. அதனை வைத்து போலீசார் தீவிர சோதனை செய்ததில் ஸ்ரீகாந்த் வசமாக சிக்கினார். அவர் தனது மகனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது புலம்பினாலும், தவறு செய்ததற்கு கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைத்தே தீரும் என சிவபாலன் கூறியுள்ளார்.
தப்பிக்க பார்த்த கிருஷ்ணா: நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் அதே நாளில் கைது செய்ய நினைத்த நிலையில், அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். எப்படியாவது இந்த வழக்கில் சிக்காமல் தப்பித்து விட வேண்டும் என அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகி போகும் அளவுக்கு வாட்ஸ் அப் சாட் மூலம் வசமாக மாட்டிக் கொண்டார். ஆரம்பத்தில் தான் போதைப் பொருள் எடுத்துக் கொள்ளவே இல்லை என்றும் தனது உடலுக்கு அவை ஒத்துக்காது என்றும் பேசிய நிலையிலும், அவரை போலீசார் தகுந்த ஆதாரங்களுடன் பிடித்து கைது செய்தனர். ஜாமீன் கேட்டு அவர் மனு அளித்திருந்தாலும், அது அவ்வளவு எளிதில் கிடைப்பது கஷ்டம் தான் என்கின்றனர்.
அடுத்து யாராவது சிக்குவார்களா?: நடிகர் கிருஷ்ணாவே இந்த வழக்கில் இருந்து தப்பிக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் வசமாக சிக்கிய நிலையில், தப்ப முடியவில்லை. ஆனால், இதற்கு மேல் இந்த வழக்கு அப்படியே வால் பிடித்தார் போல அடுத்தடுத்து பெரிய நடிகர்களை நோக்கியோ, அல்லது நடிகைகளை நோக்கியோ செல்லும் என பலரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். பாலிவுட்டில் ஒரு சில 3ம் கட்ட நடிகர்களும் நடிகைகளும் சிக்கினர். அத்துடன் அங்கே சோதனைகள் நிறைவடைந்து விட்டன. கன்னடத்திலும் நடிகை ராகிணி திவேதி உள்ளிட்டோர் சிக்கினார்கள். ஆனால், அதன் பின்னர், அங்கேயும் பெரிதாக டாப் நடிகர்கள் பெயர் ஏதும் வரவில்லை, அவர்களுக்கு பெரிதாக ஆபத்து ஏற்படவில்லை. அதே நிலைமை தான் தமிழ் சினிமாவிலும் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால், போலீசாரிடம் தகுந்த ஆதாரங்கள் சிக்கினால், மேலிட அழுத்தங்கள் சரியாக இருந்தால், இன்னும் கூட சிலர் சிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











