வெறும் பேச்சு மட்டும்தான்.. உலக சினிமாவே நாங்க தான்னு சில இயக்குநர்கள் சொல்றாங்க.. ஷாம் கலாய்!
சென்னை: கன்னட சினிமாவில் கேஜிஎஃப், காந்தாரா படங்கள் பான் இந்தியா வெற்றியை பெற்றுவிட்டன. தெலுங்கில் பாகுபலி, புஷ்பா படங்கள் புதிய ரெக்கார்டையே இந்தியளவில் படைத்து விட்டன. ஆனால், கோலிவுட்டில் வெறும் வாய் பேச்சு மட்டும் தான் உள்ளது. பான் இந்தியா அளவுக்கு வெற்றியை கொடுக்க இங்கே உள்ள இயக்குநர்களால் முடியவில்லை என பங்கமாக கலாய்த்துள்ளார் நடிகர் ஷாம்.
குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் வந்த ஷாம் அடுத்து 12பி படத்தில் ஜோதிகா, சிம்ரன் என 2 ஹீரோயின்களுக்கு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, இயற்கை, லேசா லேசா உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களையும் குறிப்பாக ரசிகைகளையும் பெற்றுத் தந்தது.

ஆனால், அதன் பின்னர் அவர் நடித்த பல படங்கள் சொதப்பிய நிலையில், மார்க்கெட் இழந்து ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் நடித்த வாரிசு படத்திலும் வில்லனாகவே நடித்திருந்தார்.
அஸ்திரம்: அடுத்த வாரம் மார்ச் 7ம் தேதி ஷாம் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள அஸ்திரம் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார் நடிகர் ஷாம். அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் மற்றும் நிரஞ்சனி நடித்துள்ள படம் ஷாமுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கிறார். நொடிக்கு நொடி என இன்னொரு தமிழ் படமும் அவரது கைவசம் உள்ளது.
பான் இந்தியா வெற்றி: கன்னட திரையுலகம் எல்லாம் ரொம்பவே சின்ன திரையுலகம். ஆனால், அங்கே இருந்து கேஜிஎஃப், காந்தாரா என பான் இந்தியா வெற்றிப் படங்கள் வெளியாகி இன்று அதன் மார்க்கெட் டாக்ஸிக் படத்தின் மூலம் உலகம் முழுவதும் சென்றுக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் பாகுபலி, புஷ்பா படங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்திய பாக்ஸ் ஆபீஸிலேயே புதிய ரெக்கார்டை படைத்துள்ளன. மலையாள படங்கள் எப்போதுமே கிளாஸ் தான். அங்கே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தாண்டி நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், கோலிவுட்டில் தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன என்றார்.

வாய் பேச்சு மட்டும் தான்: சூப்பர் ஸ்டார், தளபதி, தல என கோலிவுட்டில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகர்கள் இருந்தும் இங்கே ஒரு பான் இந்தியா ஹிட் கூட இன்னமும் கொடுக்க முடியவில்லை. சில இயக்குநர்கள் உலக சினிமாவையே கரைத்து குடித்தவர்கள் போல வெறும் வாய் பேச்சு மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய படங்களை பார்த்தால் உள்ளே கன்டென்ட் எதுவுமே இல்லை என ஒரே போடாக போட்டு கோலிவுட் இயக்குநர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட் என்பது போல பேசியுள்ளார் நடிகர் ஷாம்.
ரசிகர்கள் கேள்வி: பான் இந்தியா வெற்றி கொடுத்தால் மட்டுமே சிறந்த இயக்குநர்கள் என்று சொல்ல முடியுமா? பான் இந்தியா வெற்றிப் பெற்ற படங்கள் எல்லாமே சூப்பரான கதையம்சம் கொண்ட படங்களா? அதை விட தமிழில் சிறு பட்ஜெட்டில் பல நல்ல படங்கள் வந்துக் கொண்டிருப்பது எல்லாம் நடிகர் ஷாமுக்கு தெரியலையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், ஷாம் சொல்வதிலும் ஒரு நியாயம் உள்ளது என்றும் பெரிய நடிகர்கள் இருந்தும் பான் இந்தியா ரசிகர்களை கவரும் அளவுக்கு இங்குள்ள இயக்குநர்கள் படம் எடுப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை என்று ஷாம் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











