எனக்கு அப்பா வைக்க நினைத்த பெயர்.. ரஜினி சார் போல யாருமே இல்லை.. ’கூலி’ ஸ்ருதிஹாசன் பேட்டி!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் சத்யராஜின் மகளாக நடித்துள்ளார் என்பதை அவரே யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், செம உற்சாகத்தில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் முதன் முறையாக ரஜினிகாந்த் படத்தில் நடித்த அனுபவத்தையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்திய அனுபவங்களையும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

தன் தந்தை கமல்ஹாசன், தனக்கு "அக்னி" என்று பெயரிட விரும்பியதாகவும், ஆனால் அது திரைப்படத்தில் வரும் ஆயுதத்தின் பெயரைப் போல் இருப்பதாக அவரது அம்மா நினைத்ததால் அந்த பெயரை அப்பா வைக்கவில்லை என ஸ்ருதி கூறினார். மேலும், ரஜினி சாருடன் நடித்த அனுபவத்தை விவரிக்கும் போது, அவர் ஒரு "மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்" என்று புகழ்ந்தார்.
சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறையான விமர்சனங்களைப் பற்றி பேசிய ஸ்ருதி, 8, 9 வயது சிறுமியாக இருந்தபோது, சமூக ஊடகங்கள் இல்லாமல் இருந்ததால் நிறைய விஷயங்களை கேள்விப்படாமல் இருந்ததாகக் கூறினார். இப்போது சமூக ஊடகங்களில் வரும் கருத்துக்களை வடிகட்டி எடுத்துக்கொள்வதாகவும், அதில் மூழ்கிவிடாமல் இருக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் பற்றி பேசுகையில், அவர் மிகவும் அமைதியான இயக்குநர் என்றும், அவர் இயக்கும் படங்களுக்கு மாறாக, செட்டில் மிகவும் தெளிவாகவும், அமைதியாகவும் இருப்பார் என்றும் கூறினார். மேலும், லோகேஷ் நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.
சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும், தற்செயலாகத்தான் நடிகையானேன் என்றும் ஸ்ருதி கூறினார். இசை தனது வடிகாலாக இருந்ததாகவும், நடிப்பில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட பயிற்சி எடுத்ததாகவும் தெரிவித்தார். முதல் படத்தில் நடித்தபோது, வீட்டில் இருந்து வெளியேறி ஒரு புதிய இசை கன்சோல் வாங்க வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்தது என்றும் வெளிப்படையாக கூறினார்.
தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றும், அப்பா ஏதாவது சொன்னால், கடவுளிடம் பேசுவேன் என்றும் ஸ்ருதி நகைச்சுவையாக கூறினார். கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய ஸ்ருதி, அது அவரது வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவு என்றும், அதில் தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் சாருடன் "கூலி" படத்தில் நடித்த அனுபவம் ஒரு "முழு வட்டம்" போன்ற உணர்வைத் தந்தது என்று ஸ்ருதி கூறினார். அவரது குடும்பத்தினரை சிறுவயதில் இருந்தே தெரியும் என்பதால், அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார். பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்த பிறகு ஸ்ருதிஹாசனுக்கு பெரிய படமாக கூலி படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











