யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்... ஆனால் கல்யாணம்? ம்ஹூம்!- சிம்பு
யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அதில் பிரச்சினையில்லை. ஆனால் திருமணம் என்று வரும்போது சில விஷயங்களை யோசிக்க வேண்டியுள்ளது என்கிறார் சிம்பு.
சிம்பு நடிப்பில் கடைசியாக வந்த படம் போடா போடி. இரண்டு ஆண்டுகளாகிவிட்டது படம் வெளியாகி. அதன் பிறகு அவர் நான்கு படங்களில் நடித்தாலும், எதுவும் வெளியாகிற வழியைக் காணோம்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியிலிருந்து...

ஏன் தாமதம்?
ஏன் உங்கள் படங்கள் வெளியாக இத்தனை தாமதம்?
இரண்டு ஆண்டுகள் இடைவெளி என்பது எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இந்த இரண்டாண்டுகளில் நான்கு படங்களை முடித்து விட்டேன். இந்தப் படங்கள் தவறான இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. பல்வேறு காரணங்களால் அவை முடங்கியுள்ளன. விரைவில் அவை ஒவ்வொன்றாக வெளிவரும். முதலில் வாலு ரிலீஸ் ஆகவிருக்கிறது.

இது நம்ம ஆளு
இது நம்ம ஆளு படம் பற்றி...
என் படங்கள் பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் மனநிலை வேறு மாதிரி இருக்கிறது.
‘இது நம்ம ஆளு', ‘வாலு', போன்ற படங்களில் என் வேலை எதுவோ அதை செய்து இருக்கிறேன். ரசிகர்களுக்குப் பிடிக்கும் படமாக அது இருக்கும். எனக்காகக் காத்திருந்து படம் பார்க்கும் அவர்களுக்காகத்தான் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன். அடுத்த வருடம் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது.

நயன்தாரா கூட ஒண்ணுமில்ல
நயன்தாரா, தனுஷ், போன்றோருடன் பார்ட்டிகளுக்கு போகிறீர்களே?
நயன்தாராவை பார்ட்டியில் சந்தித்தேன். பேசிக்கொண்டோம். படப்பிடிப்பிலும், பொது நிகழ்ச்சிகளில் பார்க்கும்போதும் பேசிக்கொள்கிறோம். அதற்கு மேல் எதுவும் இல்லை. இதுபோல் தனுசையும் சந்திக்கிறேன். எங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு குளிர்காய சிலர் நினைத்தனர். அது நடக்கவில்லை.

ஹன்சிகா விவகாரம்
ஹன்சிகாவுடன் காதல் விவகாரத்தில் என்னதான் நடந்தது?
காதல் விஷயங்களில் எப்போதுமே நான் வெளிப்படையானவன். யாராவது, ஏதாவது சொல்வார்களோ என்றெல்லாம் பயப்படாமல் முறிவு பற்றி வெளிப்படையாக சொன்னேன். யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது சில விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டியது முக்கியம்.

பக்குவம் வந்துடுச்சி
என்ன பிரச்சினைகள் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. எனவே இருவரும் பேசி, பிரிய முடிவு செய்தோம். எனக்கு தெரிந்த பலர் இதுபோல் காதல் முறிவு ஏற்பட்டபோது அழுது இருக்கிறார்கள். எனக்கு ஏற்கனவே இதுபோல் முறிவுகள் ஏற்பட்டபோது மனஅழுத்தம் ஏற்பட்டது. அதில் இருந்து வெளிவர நீண்டதூரம் பயணம் செய்திருக்கிறேன்.
ஆனால் ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு சாதாரணமாகவே இருந்தேன். எனக்குள் பக்குவம் ஏற்பட்டு இருந்தது.

அடுத்த காதல்...
அதுபற்றி எனக்கு தெரியாது. இப்போது தனியாக சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். திருமணமான எல்லோரும் சந்தோஷமாகவா இருக்கிறார்கள்?," என்றார் சிம்பு.


Click it and Unblock the Notifications











