உயிருக்கு போராடிய நேரத்தில் கூட போட்டோ.. என்ன பத்தி தப்பா பேச நீ யாரு.. விளாசிய பாடகி கல்பனா!
சென்னை: பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் தனது இல்லத்தில் அளவிற்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு, சுயநினைவின்றி கிடந்தார். இந்த தகவல் தெரிந்த போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கும் அவரது கணவருக்கும் இருந்த பிரச்சனை காரணமாகத் தான், அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக இணையத்தில் செய்திகள் வெளியானது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பாடகி கல்பனா, நான்கு செவுத்துக்குள் நடந்த விஷயம் யாருக்கும் தெரியாத போது, என்னை பற்றியும், என் கணவர் பற்றியும் தவறாக செய்திகளை பரப்பிய யூடியூபர்களை விளாசினார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக youtube-ல் காரசாரமான விவாதம் ஒன்று சென்று கொண்டிருக்கிறது அது என்னவென்றால் கல்பனா தற்கொலைக்கு முயன்றார். அந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் கல்பனாவின் கணவர் தான், கல்பனாவின் மகளுக்கும் அவருக்கும் சண்டை அதனால்தான் தூக்கு மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார் என்கிற செய்தி தமிழ் ஊடகங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள ஊடகங்களிலும் பரவின.
பாடகி கல்பனா: எட்டு வருடங்களாக பாடி நான் சேர்த்த புகழை விட இந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மிகப்பெரிய அளவில் புகழ் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது நான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டி இருக்கின்றேன். ஊடகங்கள் சரியான முறையில் கையாளப்படவில்லை என்பதை பணி அன்புடன் தாழ்மையுடன் இந்த சந்திப்பின் மூலம் கூறிக்கொள்கிறேன்.

மனஅழுத்தம் காரணமாக: எனக்கு தற்போது 45 வயசாகிறது என் உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த வயதிலும், நான் எல்.எல்.பி படித்துக் கொண்டிருக்கின்றேன். 5 செமஸ்டர்களை முடிந்துவிட்டேன். ஐந்தாவது செமஸ்டர் பிப்ரவரியில் நடந்தது, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு அரியர் கூட இல்லாமல் அதை முடித்து விட்டேன். எனக்கு ஜனவரியில் இருந்து உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது, என்னுடைய லன்சில் தண்ணீர் சேர்ந்து விட்டதால், இருமல், இதய வலியுடன் நான் அவதிப்பட்டு கொண்டிருந்தேன்.
கணவருடன் பிரச்சனையா: எனக்கு பல ஆண்டுகளாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது. இதற்காக நான் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறேன். கடந்து சில நாட்களாக எனக்கு தொடர்ந்து படிப்பு சம்பந்தமாகவும் வேலை சம்பந்தமாகவும், மன அழுத்தமும், தூக்கமின்மையும் இருந்ததால். அன்று அதிக அளவு மாத்திரைகளை எடுத்துக் கொண்டே, அது என் கணவருக்கு தெரியும் அந்த நேரத்தில் நான் சுய நினைவை இழந்து விழுந்துவிட்டேன். அந்த நேரத்தில் நான் கணவருடன் தான் பேசிக்கொண்டு இருந்தேன். என் கணவர் தான்,அருகில் இருப்பவர்களுக்கும், ஆம்புலன்ஸும் போலீசும் தகவல் கொடுத்தார். அதன் பிறகு தான் போலீஸ் பின் பக்கமாக கதவை உடைத்து உள்ளே வந்து என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
ஆனால் செய்திகள் எல்லாம் பாடகி கல்பனாவின் தற்கொலைக்கு காரணம், அவரது கணவர் என்று சொல்லும் போது அதை கேட்பதற்கு மிகவும் வருத்தமாகவே இருக்கிறது. என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய நல்ல விஷயம் என் கணவர் மட்டும் தான். அவரால் தான், நான் இந்த வயதிலும், படித்துக் கொண்டும், பாடிக்கொண்டும், குடும்பத்தை கவனித்துக் கொண்டும் இருக்கிறேன். அவர் பக்கபலமாக இல்லை என்றால், என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது.

பச்சை பொய்: என்னுடைய மகள், நான் மருத்துவமனையில் ஐசிவில் இருக்கும்போது, அதிகமாக தூக்க மாத்திரையை உட்கொண்டார் என்று பேட்டி அளித்திருந்தார். அதைக் கூட பல மீடியாக்கள் திருத்தி செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள். பாடகி கல்பனாவிற்கு நடந்தது என்று தெரியுமா என ஒரு யூடியூபில் சொல்லி இருக்கிறார். இப்போதுதான் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வந்து இதுதான் நடந்தது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாமல், இதுதான் நடந்தது என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது. என்னுடைய திருமணத்திற்கு, என்னுடைய விவகாரத்திற்கு, நான் குழந்தை பெற்றபோது யாராவது என்னை தேடி வந்தார்களா? நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன், நான் எப்படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று என்னைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவர். நான்கு செவுத்துக்குள், எனக்கும் என் கணவருக்கும் நடந்த நல்லது கெட்டது எப்படி தெரியும். என்னை மட்டுமல்ல இது போன்ற பல பெண்களை பேசுவதையே அவர் குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

பொய்யான செய்தி: யூட்யூபில் வரும் இதுபோன்ற நெகட்டிவ் வீடியோகளுக்கு லைக்கள் அதிகமாக வருகிறது என்பதற்காக இல்லாததை எல்லாம் திருத்தி எழுதி, ஒரு குடும்பத்தின் மீது சேற்றை வாரி வீசுவதில் எந்த வகையில் நியாயம், அந்த செய்தியால், என் குடும்பம் பட்ட வேதனையையை, சேர்ந்துவைத்த பெயரை ஒரு நொடி உடைத்துவிட்டீர்கள். நான் ஒரு பாடகி செலபிரட்டி என்னுடைய தொலைபேசி எண் பலரிடமும் இருக்கு, அப்படி இருக்கும்போது ஒருவர் கூட, என்னுடைய தொலைபேசி எண்ணில் அழைத்து, நீங்கள் தற்கொலை முயற்சியில் செய்தீர்களா? இணையத்தில் இப்படி ஒரு செய்தி வெளிவருகிறதே இது உண்மையா என கேட்கவே இல்லை. இதேநிலை, சென்று கொண்டிருந்தால் நேரு, காந்தி என பலர் இந்த நாட்டிற்காக நல்லது செய்த அனைவரையும் மறந்துவிட்டு, நெகட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசிக் கொண்டு இருப்போம். முதலில் அடுத்தவர்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. பச்சையாக சொன்னால் அது தான் உண்மை என்று பாடகி கல்பனா ஆவேசத்துடன் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











