Parasakthi Bayilvan Review: பராசக்தி பிரளயத்தை ஏற்படுத்தும்.. அனல் தெறிக்கிது.. பயில்வான் விமர்சனம்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று ஜனவரி 10 ந் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதால் சிக்கல் ஏற்பட்டு படத்தில் 52 இடங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் மியூட் செய்யப்பட்டு இன்று வெளியாகி உள்ளது. இந்த படம்குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
பழைய பராசக்தி திரைப்படம் கலைஞரின் வசனத்தால், சிவாஜி கணேசனின் நடிப்பால் அந்த காலகட்டத்தில் எப்படி மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படமும் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா, சேத்தன் ஆகியோர் நடித்துள்னர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வனத்தை எழுதி இயக்கி இருக்கிறார் சுதா கொங்கரா.

பராசக்தி: 1960களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் எப்படி உச்சத்தில் இருந்தது, மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினாலும் அதன் பிறகு அதை கையில் எடுத்துக் கொண்டது திமுக. இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக ஆட்சி அமைப்பதற்கும், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராவதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள மாணவ தலைவர்கள் தான் ஹீரோவாக்களாக இருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னிட்டு நடத்தினார்கள்.
படத்தின் கதை: இந்த பராசக்தி திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் ஒரு அரசு ஊழியராக இருக்கிறார். தான் உண்டு தான் வேலை உண்டு என ஒரு சாதாரண அரசு ஊழியர். சிவகார்த்திகேயனுடைய தம்பி அதர்வா முரளி, கல்லூரியில் படிக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே சமூக விழிப்புணர்வு போராட்டங்களை நடத்துகிறார். அதில் ஒன்று தான் இந்தி எதிர்ப்பு போராட்டம், இதற்கு மாணவர்களும் துணை நிற்கிறார்கள். தம்பியின் இந்த செயலை கண்டிக்கும் சிவகார்த்திகேயன் காலேஜுக்கு போய் படிக்கிற வேலையை பாரு, போராட்டம் செய்வது எல்லாம் தேவையில்லாத வேலை என பலமுறை தம்பிக்கு அறிவுரை கூறுகிறார். ஆனால், அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அதர்வா தொடர்ந்து இந்தி எதிராக போடுகிறார்.

மாஸ் வில்லன்: இந்த நேரத்தில் தான் காவல்துறை அதிகாரியாக கொடூரமான செயல்களை செய்யும் போலீஸாக ஜெயம் ரவி வருகிறார். அவருக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் வேலை என்னவென்றால், இந்திக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான். மேல் இடத்திலிருந்து அழுத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க ஜெயம் ரவி, மாணவர்கள் எங்கெல்லாம் போராட்டத்தை நடத்துகிறார்களோ, அவர்கள் சுட்டு தள்ளுங்கள் என உத்தரவு பிறப்பிக்கிறார். அதன் பின் அதர்வாக்கு என்ன ஆனாது.. சிவகார்த்திகேயன் எப்படி போராட்டக்காரராக களமிறங்கினார் என்பது தான் படத்தின் கதை.
அட்டகாசம்: ஜெயம் ரவியை பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக பார்த்திருப்போம், தனி ஒருவன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்திருப்பார். ஆனால், இந்த படத்தில் வேற மாதிரி ஒரு வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி ஹீரோவா நடிப்பதை விட வில்லனாகத்தான் நடிக்க அதிக வாய்ப்புகள் வரும். ஏனென்றால் அந்த அளவுக்கு வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். அதேபோல அதர்வா, பல படங்களில் அவர் நடித்த கதாபாத்திரம் நமக்கும் பிடிக்கும். ஆனால், இந்த படத்தில் வேறு ஒரு அதர்வா நம் கண் முன்னே வருகிறார். படத்தை பார்க்கும் நமக்கு சிவகார்த்திகேயன் ஹீரோவா இல்லை, அதர்வா ஹீரோவா என்று நினைக்கும் அளவிற்கு பல இடங்களில் அதர்வா அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அதர்வாவிற்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வரும். கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். வழக்கம் போல எல்லா கதாநாயகிகளும் செய்வது போல, விழுந்து விழுந்து சிவகார்த்திகேயனை காதலிக்கிறார். தமிழில் இதுதான் அவரின் முதல் படம். முதல் படத்திலேயே தன்னுடைய சொந்த குரலில் பேசி இருக்கிறார்.
மாணிக்க கல்: இவர்கள் அனைவரின் நடிப்பையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிவகார்த்திகேயன் வேறலெவலில் நடித்திருக்கிறார். எப்போது ஜெயம் ரவி வில்லனாக கதைக்குள் வருகிறாரோ.. அப்போதிலிருந்து சிவகார்த்திகேயன் நடிப்பு அடுத்த கட்டத்திற்கு சென்று விடுகிறது. அதுவரையில் அமைதியாக இருந்த சிவகார்த்திகேயன், ஒரு போராட்ட வீரராக, ஒரு எழுச்சிமிகு போராட்டக்காரராக மாறுகிறார். படத்தில் இரண்டு விதமான சிவகார்த்திகேயனை பார்க்கலாம், ஒருவர் அமைதியானவர், இன்னொருவர் போராட்டக்காரர். சிவகார்த்திகேயனின் நடிப்பு சொல்லவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்திற்கு சென்று இருக்குது இனிமே எந்த நல்ல கதாபாத்திரமாக இருந்தாலும் நிச்சயமாக சிவகார்த்திகேயனை பயன்படுத்திக் கொள்ளலாம். சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இன்னொரு மாணிக்க கல்லாக இந்த பராசக்தி திரைப்படம் அமைந்து இருக்கிறது.
பாராட்டுக்கள்: 60 ஆண்டு காலகட்டத்தில் நடந்த கதை என்பதால், அதற்கு தகுந்தபடி செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். ஆனால், அவசை செட் என்பது எந்த இடத்திலும் தெரியவே இல்லை. அதேபோல, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள், மாணவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என அனைத்தையும் படத்தில் அழகாக சொல்லி மெய்சிலிர்க்க வைத்து விட்டார் இயக்குநர். இந்த காலத்து தலைமுறையினருக்கு நிச்சயமாக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால் என்ன என்று தெரியாது. அப்படி ஒரு கதையை கையில் எடுத்த சுதா கொங்கராவிற்கு பாராட்டையும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











