கங்குவா மிஸ் ஆகிடுச்சு.. சூர்யாவோட அடுத்த பிரம்மாண்டம் ரெடியாகப் போகுது.. பாலிவுட் இயக்குநர் பளிச்!
சென்னை: நடிகர் சூர்யா நடிக்கவுள்ள பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படம் 'கர்ணன்' படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகும் இந்த இதிகாச படத்திற்கான அறிவிப்பை சமீபத்திய பேட்டியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் உறுதிபடுத்தியுள்ளார். இது, படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சூர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அயன், மாற்றான், சிங்கம் சீரிஸ், 7 ஆம் அறிவு, 24 என வித்தியாசமான கதைகளையும் பிரம்மாண்ட படங்களையும் கொடுத்து வந்தார். சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்தது மட்டுமின்றி சமீபத்தில் மாநில விருதுகளையும் அள்ளியது.

ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் யூடியூப் சேனலில் வரை அதை பற்றிய தடத்தை பதிவு செய்தது. எப்படியாவது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸை பிடிக்க வேண்டும் என நினைத்து சூர்யா நடித்த மெகா பட்ஜெட் திரைப்படமான கங்குவா திரைப்படம் சரியாக ரசிகர்களை கனெக்ட் செய்ய முடியாத சூழலில் படுதோல்வியை சந்தித்து சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபீஸில் சரிவை ஏற்படுத்தியது.
பல மாநில இயக்குநர்கள்: ஆனால், சூர்யாவின் நடிப்பையும் உழைப்பையும் யாராலும் அணை போட்டு தடுத்து விட முடியாது. பாகுபலி படத்திலேயே பிரபாஸுக்கு முன்பாக சூர்யாவை தான் ராஜமெளலி அணுகியதாக கூறியிருந்தார். டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தை நிறைவு செய்யவுள்ள சூர்யா, மலையாள சினிமாவில் மாஸ் காட்டிய ஆவேஷம் படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யாவின் பான் இந்தியா படமான கர்ணன் படத்தை கூடிய சீக்கிரமே ஆரம்பிக்கப் போவதாக ரங் தே பசந்தி, டெல்லி 6 உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கர்ணன் டிராப் ஆகவில்லை: 'கர்ணன்' படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் தாம் மும்முரமாக இருப்பதாக ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தெரிவித்தார். இருப்பினும், கூடுதல் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார். எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் இப்படத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார். முதல் பாகம் தற்போது ப்ரீ புரொடக்ஷன் நிலையில் உள்ளது. இப்படத்தில் விஜய் வர்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். எக்செல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படம் pause செய்யப்பட்டுள்ளதே தவிர drop ஆகவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ராகேஷ் ஓம்பிரகாஷ் கூறியுள்ளார்.
நயன்தாராவா? ஜான்வி கபூரா?: சூர்யாவின் 'கர்ணன்' படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில், நயன்தாராவை அணுகி படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மகாபாரதத்தின் சூரிய பகவானுக்கும் குந்தி தேவிக்கும் பிறந்த கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த புராண வரலாற்றுப் படம். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ஆரம்பித்து விட்டால் சூர்யா ரசிகர்கள் செம குஷியாகி விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











