154 படத்துல 7 தான் தியேட்டர் வெற்றி.. 17 படங்கள் நான் தியேட்டரிக்கல் வெற்றி.. ஸ்ரீதர் - தனஞ்செயன் பளிச்!
திரைப்பட விநியோகஸ்தர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் தனஞ்செயன், ரமேஷ் பாலா உள்ளிட்டோர் பங்கேற்ற ரவுண்ட் டேபிள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு வெளியான வெற்றிப் படங்கள் குறித்தும் வரப்போகும் படங்கள் குறித்தும் அலசப்பட்டன. ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் ஒன்று அவரது திரையரங்கில் திரையிடப்பட்டது. முதல் நாள் இரவே 300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆனால், ஆச்சரியமளிக்கும் விதமாக, 227 பேர் மட்டுமே படம் பார்க்க வந்தனர். மீதமுள்ள டிக்கெட்டுகளை திரும்பக் கேட்டபோது, அவர் அதிர்ந்து போனார். அன்று வெளியான படம் சரியில்லை என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது என ஸ்ரீதர் பேசினார்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ் சினிமாவின் போக்குகள் குறித்து தனஞ்சயன், திருச்சி ஸ்ரீதர், ரமேஷ் பாலா மற்றும் சித்தார்த் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் கலந்துரையாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 161 படங்கள் வெளிவந்துள்ளன. அதில் வெறும் 7 படங்கள் மட்டுமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்கிறார் ஸ்ரீதர். ஆனால், ஜூலை மாதத்துடன் சேர்த்து இதுவரை 154 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. அதில், 17 படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றதாக தனஞ்செயன் ஸ்ரீதரின் பேச்சை கரெட் செய்தார்.

திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் சமூக ஊடகங்களின் தாக்கத்தை கருத்தில் கொள்வது முக்கியம். ட்ரெய்லர்கள் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன என்கிறார் சித்தார்த். உதாரணமாக, 'கூலி' படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு படத்தின் வெற்றிக்கு ஒரு முன்னோடியாக இருக்கலாம். அதே நேரம் ட்ரெய்லர் வெளியான பின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்தால் அது படத்தின் வசூலை பாதிக்கும் என்கிறார் ரமேஷ் பாலா.
சினிமா வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தியேட்டரில் கிடைக்கும் வருமானம் முக்கியம் என்றாலும், தயாரிப்பாளருக்கு கிடைக்கும் லாபமும் அவசியம் என்கிறார் தனஞ்சயன். 'பெருசு' திரைப்படம் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது ஒரு உதாரணம். மர்மர் மற்றும் ஃபயர் திரைப்படங்களும் பெரிய லாபத்தை ஈட்டியுள்ளன என்றார். தியேட்டர் உரிமையாளர்களுக்கு, பார்வையாளர்களின் எண்ணிக்கை முக்கியம். ஆனால், தயாரிப்பாளர்களுக்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் என்றார் தனஞ்செயன்.
சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து ஒரு மாயை என்று ஸ்ரீதர் கூறுகிறார். எந்த நடிகராலும் ரசிகர்களை கட்டாயப்படுத்தி தியேட்டருக்கு வரவைக்க முடியாது. நல்ல கதை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் வருவார்கள். சூர்யா நடித்த 'ரெட்ரோ' படத்தின் முதல் நாள் வசூல் 12-13 கோடி ரூபாய். இது அவரது ஸ்டார் அந்தஸ்தால் கிடைத்தது என்கிறார். ஆனால், படம் நிலைத்து நிற்க கதைதான் முக்கியம் என்கிறார்.

சினிமாவின் தற்போதைய நிலை குறித்து ஸ்ரீதர் கவலை தெரிவித்தார். தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதற்கு முன் சரியான திட்டமிடல் இல்லாமல் வருகின்றனர். ஒரு படம் வெற்றியடைய வேண்டுமென்றால், அது பார்வையாளர்களுக்கு ஒரு தியேட்டர் அனுபவத்தை தர வேண்டும். மாமன் படத்துக்குப் பிறகு தலைவன் தலைவி படம் தான் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்து வருவதாக கூறினார். ஆகஸ்ட் மாதத்தில் கூலி திரைப்படம் தியேட்டர் ஓனர்களின் கவலைகளை கண்டிப்பாக போக்கி விடும் என தனஞ்செயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ப்ரோவோக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீதர், தனஞ்செயன், ரமேஷ் பாலா மற்றும் சித்தார்த் ஸ்ரீனிவாஸ் இந்த கலந்துரையாடலை நடத்தினர்.


Click it and Unblock the Notifications











