மனிதாபிமானமே இல்லை.. காக்கா கதை.. குருவி கதை சொல்லிட்டு இருக்காங்க - திருப்பூர் சுப்ரமணியம்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லை என திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள், எந்தளவுக்கு சினிமாத்துறை லாபத்தை சந்தித்துள்ளது. எத்தனை சதவீதம் சரிவு என கணக்குப் போட்டு பேசி வருகிறார்.
இன்னொரு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர்ச் சுப்ரமணியம் ஏகப்பட்ட விநியோகஸ்தர்கள் காலி, சிங்கிள் தியேட்டர்கள் காலி, லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களையும் முன்னணி ஹீரோக்கள் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் உள்ளிட்டோர் வாஷ் அவுட் செய்து அனுப்பி விட்டனர் என ஓபனாகவே பேசியுள்ளார்.

மேலும், இயக்குநர்களை மதிப்பதே கிடையாது. ஆடியோ லான்ச் வைத்தால், காக்கா கதை சொல்வது, குருவி கதை சொல்வது என முன்னணி ஹீரோக்களின் துதி பாடிக் கொண்டிருந்தால் தமிழ் சினிமா இனி மெல்லச் சாகும் என்றே பொங்கிவிட்டார்.
ஓடிடியால் உயர்ந்த சம்பளம்: ஒரே நாளில் உலகளவில் படங்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன. முன்பெல்லாம் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே சிங்கிள் டிஜிட்டில் 10 கோடிக்குள் தான் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தனர். சாட்டிலைட் உரிமம், கிளோபல் ரிலீஸ் காரணமாக சம்பளம் 50 கோடி வரை உயர்ந்தது. திடீரென ஓடிடி நிறுவனங்களின் படையெடுப்பால் ஹீரோக்களின் சம்பளம் எதிர்பார்க்காத அளவுக்கு 100 கோடி, 200 கோடி என ஆகிவிட்டது என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

மனிதாபிமானமே இல்லை: முன்னணி நடிகர்களுக்கு மனிதாபிமானமே இல்லை. ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சினிமாவை விட்டே விலகி விட்டனர். சிங்கிள் தியேட்டர்கள் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்பாகவும், ஷாப்பிங் மாலாகவும் மாறி வருகின்றன. ஆனால், சம்பளத்தைக் குறைக்க மாட்டேன் 2 வருடங்கள் சும்மா கூட இருப்பேன் என ஹீரோக்கள் மனிதாபிமானமே இல்லாமல் நடந்துக் கொள்கின்றனர் என திருப்பூர் சுப்ரமணியம் சாடியுள்ளார்.
காக்கா கதை, குருவி கதை: சன் பிக்சர்ஸ் வருஷத்துக்கு ஒரு படம் தான் அதுவும் பெரிய ஹீரோ வச்சு பண்றாங்க. வேல்ஸ் மற்றும் ஏஜிஎஸ் தான் அதிக படங்களை பண்றாங்க. 20 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கும் ஹீரோக்களை வைத்து படம் பண்ணப் போவதில்லை என்கிற முடிவுக்கே வந்துவிட்டனர் என்றுள்ளார். ஆடியோ வெளியீட்டு விழாக்களில் ஹீரோக்கள் காக்கா கதை, குருவி கதை சொல்லிட்டு இருக்காங்க. இயக்குநர்கள் நல்ல கதையை குழந்தை போல உருவாக்கி எடுத்து வைத்தால், அந்த குழந்தையின் கைகளை பிச்சிப் போடுவது, கால்களை உடைப்பது என தங்களுக்கு எல்லாமே தெரிந்தது போல பண்ணி படங்களை ஃப்ளாப் செய்து வருகின்றனர் என பொங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











