Tourist Family: டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு வந்த மோசமான கமெண்ட்.. மனுஷன் தூக்கத்தை கெடுத்தது யாரு?
சென்னை: "யாருயா சொன்னா நீ அகதி'னு என்று முடிகிற அல்லது அந்த க்ளைமேக்ஸில் இருந்து துவங்குகிற ஒரு ஃபீல் குட் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். 24 வயதில் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற எமோஷன்ஸ் நிறைந்த, தனது அரசியல் நிலைப்பாட்டை லாவகமாக காட்சிப்படுத்தியது என 2கே கிட்ஸ்களில் தனித்து மிளிர்கிறார் அபி. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். இவர் இந்த படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருந்தபோது அவர் எதிர் கொண்ட ஒரு கமெண்ட் அவரை தோல்வி அடைந்துவிட்டதாக உணரச் செய்தது என்று அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சசிகுமார், சிம்ரன், பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மே 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும், பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனையும் அள்ளிக்கொண்டுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அழுத்தம் திருத்தமான கதை இருந்தால் ரசிகர்கள் வெற்றியைக் கொடுப்பார்கள் என்பதற்கு டூரிஸ்ட் ஃபேமிலி படமும் ஒரு உதாரணம்.

அனுபவம்: இந்நிலையில் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அண்மையில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, " நான் இந்த படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். படத்தின் கதை குறித்த விவாதத்தில் கூட பலரும் என்னிடத்தில் கேட்ட விஷயம் என்றால் ஏன் அந்த குடியிருப்பில் ஒரு நெகடிவ் கதாபாத்திரம் கூட இல்லை என்பதுதான். ஆனால் எனக்கு அது தேவைப்படவில்லை. மேலும் இப்படியான கதைக்களம் எனக்கு திருப்தியைக் கொடுத்தது. அது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்பினேன்.
முதல் வாய்ப்பு: எனக்கு வாய்ப்பு கொடுக்க பலரும் யோசித்தார்கள். காரணம், எனது வயது, நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது கிடையாது, இந்த கதைக்கு யாரை வைத்து படம் பண்ணுவது என்பதுதான். நான் கல்லூரி கடைசி ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும்போதே ஒரு படத்தில் கமிட் ஆனேன். ஆனால், சில பல காரணங்களால் படம் நகரவில்லை. அதன் பின்னர் கொரோனா வந்ததால், படம் மொத்தமாகவே கைவிடப்பட்டு விட்டது. பலரும் என்னிடம் அந்த படம் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எனக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

கண்ணீர்: அந்த காலகட்டத்தில் நான் ஒரு பள்ளியில் நடிப்பு சொல்லிக் கொடுப்பவராக பணியாற்றினேன். அந்த வளாகத்தில் கல்லூரியும் இருந்தது. நான் பள்ளி குழந்தைகளுக்காக ஒரு நாடகம் தயார் செய்தேன். அதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கல்லூரி மாணவர் ஒருவர், 'ஆமாம் இவரு பெரிய ராஜமௌலி, பாகுபலி எடுத்துட்டு இருக்காரு' என்று கூறிவிட்டார். அதைச் சொன்னது யார் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அழுது கொண்டுதான் வீட்டுக்குப் போனேன். அன்று இரவு எனது மனதில் தோன்றிய விஷயம் என்றால், நான் தோற்றுவிட்டேனோ, இனி இதுதான் எனது வாழ்க்கையோ என்ற மன நிலைக்கு வந்துவிட்டேன். அந்த மனநிலையில் இருக்கும் போது தான் நான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











