எங்கேயும் என்னை விட்டு கொடுக்காத கவிஞர் தான் வாலி.. கவிஞர் மேத்தா உருக்கம்!
சென்னை: 1980 - 1990 காலக்கட்டத்தில் வெள்ளி விழா திரைப்படமாக ஓடிய உதயகீதம், பன்னீர்புஷ்பங்கள், வேலைக்காரன், கேளடி கண்மணி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் கவிஞர் மு.மேத்தா.
2006ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற இவர் புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களில் ஒருவர்.
இந்நிலையில் கவிஞர் மு.மேத்தா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

உத்வேகம்
கேள்வி: உதயகீதம் திரைப்படத்தின் பாடல் எழுதிய தருணம் எப்படியிருந்தது?
பதில்: உதய கீதம் திரைப்படத்திற்கு பாடல் எழுதியது நினைவில் இருக்கிறது. ஆனால் அது தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நினைவில் இல்லை. நாம் எழுதும் பாடல்கள் ஒருவரை தூங்க வைப்பதற்காகவே, ஏங்க வைப்பதற்காக இல்லை. மாறாக அவர்கள் மனதில் எழுச்சி தருவதற்காக அமைய வேண்டும். அதுவே சிறந்த பாடல். ஒரு பாடலாசிரியன் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. ஆனால் மாற்றத்தை உருவாக்கும் ஒருவனை பாடலாசிரியராக உருவாக்க முடியும். ஒரு பாடல் அந்த உத்வேகத்தை கொடுக்கும். பிரஞ்சு புரட்சி கூட எழுத்துக்களால் உருவானது தான் என்றார்.

நான் பீரங்கிப்பெட்டி
கேள்வி: கவிஞர் கண்ணதாசன் குறித்து...
பதில்: கண்ணதாசனுடன் நான் பழகும் போது அவர் திரையுலகில் உயர்ந்த இடத்தில் இருந்தார். அவர் மீது எனக்கு அன்பும் மரியதையும் நிறையவே உண்டு. தமிழை அனைவரையும் ரசிக்க வைத்தவர் கண்ணதாசன். சினிமா பாடலில் இவ்வளவு விஷயங்களை சொல்ல முடியுமா என நான் வியந்ததுண்டு. அவர் உண்மையிலேயே கவியரசர் தான். பாடலாசிரியர் வாலி என்னுடன் நன்றாக பழகுவார். மிகவும் அன்பாகப் பழகுவார். என்னுடைய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுக்காதவர். நானும் அப்படித்தான் என் மீது அன்பு செலுத்துபவர், வீட்டு குட்டி நாய். அன்பில்லாதவர்களுக்கு நான் பீரங்கி பெட்டி.

கோபக்காரர்
கேள்வி: இசையமைப்பாளர் இளையராஜா குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இளையராஜாவுடன் நான் நிறைய படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன். அன்பு யாரிடம் உள்ளதோ அவர்களுடன் பணி புரிவது ரொம்பவும் சுலபம். ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தாலும் அவரது துறையில் அவர் ராஜாவாகவே வாழ்கிறார். அவர் எப்பொழுதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார். இளையராஜாவைப் பற்றி சொல்ல வேண்டுமானால் என் தமிழுக்கும், சொல் நயத்திற்கும் அவர் ரசிகர். அவர் என்னைப் போலவே கோபக்காரர். உதயகீதம் திரைப்படத்தில் 'பாடு நிலாவே' எனும் பாடல் எழுதும் போது கதாநாயகி பாடு நிலாவே என்று பாட கதாநாயகன் பாடும் போது பாடும் நிலாவே என எழுதச் சொன்னார். நானும் 'ம்' போட்டவுடன் ஜம்முன்னு இருக்கு என்று சொல்லி அவரைப் பாராட்டினேன். இதற்கு பிறகு தான் எஸ்.பி.பி அவர்களுக்கு பாடும் நிலா பாலு என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கியுள்ளனர் என்றார்.
அங்கீகாரம் இல்லை
கேள்வி: இளைய பாடலாசியர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இன்றைய இளைய சமுதாயத்தில் நிறைய பாடலாசிரியர்கள் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளனர். அவர்களில் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். வாய்ப்பு வரும் போது அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=8Cvrn2ZAgm8 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications