Bala: மரணத்தை விட கொடுமையானது துரோகம்.. யாரும் என் கூட இல்லை.. பாலா உருக்கமான பேச்சு!
சென்னை: இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளனர். படம் வெளியாகி இன்னும் சில தினங்களே இருக்கும் படம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
அதில், வணங்கான் படத்தில் பிரச்னை ஏற்பட்டதால் சூர்யா விலகி விட்டதாக சொல்வதில் உண்மை இல்லை, நானும் சூர்யாவும் பேசினோம். பொது இடத்தில் அவரை வைத்து படம் எடுக்க முடியவில்லை கூட்டம் கூடிவிடுகிறது. இதனால், இந்த படம் வேண்டாம் அடுத்த படம் எடுப்போம் என்று இருவரும் சேர்ந்து, சுமூகமாக எடுத்த முடிவு தான் அது. எங்கள் இருவருக்கும் உறவு சுமூகமாகத்தான் இருக்கிறது.

இயக்குநர் பாலா: சூர்யாவிற்கு பின் யாரை கமிட் செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்த போது, ஏ.எல்.விஜய், அருண்விஜய் ரொம்ப திறமையான நடிகர் என்று அவர் பற்றி என்னிடம் சொன்னார். அதன் பிறகு அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடித்து இருந்ததால், அவரை வைத்து படம் எடுத்தேன் என்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் கேட்ட பல கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்திருந்தார் பாலா.
பணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? : பணம் என்னை பாடாய்படுத்திவிட்டது, பணம்தான் முக்கியம் என்ற எண்ணம் அடிதடி வந்து போகும். ஆனால், அந்த பணத்தை கொடுத்து என்னை வாங்க முடியாது.
முதல் படத்தின் சம்பளம் எவ்வளவு?: சேது படத்தை மிகப்பெரிய சிரமத்தில் தான், அந்தப் படத்தையே எடுத்தோம். இதில் சம்பளம் வேறயா. அந்தப் படத்திற்கு நான் சம்பளம் வாங்கவில்லை. நந்தா படத்திற்குத் தான் முதன் முதலில், சம்பளம் வாங்கினேன். அதுவும் டாலராக வந்ததால், எவ்வளவு என்று தெரியவில்லை.
துரோகம்?: வாழ்க்கையில் நிறைய துரோகங்களை பார்த்து இருக்கிறேன். ஒரு சில துரோகங்களை மன்னித்து விடுவேன், ஒரு சில துரோகங்களை மரணத்தில் இருக்கும் போது கூட மன்னிக்க மாட்டேன், மறக்கவும் மாட்டேன். அந்த துரோகம் என்ன என்று இப்போது சொல்ல முடியாது.
காதல்?: என் வாழ்க்கையிலும் வந்தது. ஆனால் வந்ததே தெரியாமல் போய்விட்டது. முன்பு காதல் என் வாழ்க்கையில் இருந்தது. ஆனால், காதல் இப்போது அந்நியப்பட்டு விட்டது இப்போது என் வாழ்க்கையில் காதல் இல்லை.
தனிமை?: தனிமையாக இருப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் சில நேரம், யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனசு ஏங்கும்.
சாதி?: சாதி என்று ஒன்று இருந்தால் தானே அது பற்றி கருத்து சொல்ல முடியும். சாதி இருக்கிறது என்று அவர்களே சொல்லிக் கொண்டால் எப்படி. சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட கொழுக்கட்டை போன்றது, ஆளாளுக்கு அவர்களின் கைக்கு ஏற்றபடி பிடித்து, அதற்கு ஒவ்வொரு பெயரை வைத்துக் கொண்டார்கள். இதனால், எனக்கு சாதியில் எந்தவித உடன்பாடும் இல்லை, நம்பிக்கையும் இல்லை.
மரணம்?: உறங்குவது போலும் சாக்காடு... உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. தினம் தினமும் செத்து செத்துத்தான் பிழைத்துக்கொண்டு இருக்கிறோம். அனைவருக்கும் மரணத்தின் மீது பயம் இருக்கிறது. எனக்கும் மரணத்தின் மீது அடிக்கடி பயம் வந்து போகும்.


Click it and Unblock the Notifications











