ஆக்டிங் கிளாஸ் போகும் வெற்றி மாறன் மனைவி.. அந்த படத்தை பிடிக்கலைனு சொன்ன மகள்
சென்னை: தமிழ் சினிமா தம்பதிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தம்பதிகளில் வெற்றி மாறன் ஆர்த்தி தம்பதியரைக் கூறலாம். இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான் என்று அனைவருக்கும் தெரிந்தாலும், இவர்கள் மிகவும் ரொமாண்டிக்கான தம்பதியர் என்பது வெற்றி மாறனின் 50ஆவது பிறந்த நாளில் ஆர்த்தி நடனமாடிய போதுதான் தெரிந்தது. ஆர்த்தி மேடையில் நடனமாட கீழே அமர்ந்திருந்த வெற்றி மாறன் வெட்கத்தில் சிரி சிரி என சிரித்தார். இப்படி இருக்கையில் அவரது மனைவி ஆர்த்தி அண்மையில் அளித்த பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது, " நாங்கள் காதலிக்கும் போது வெற்றி என்னைச் சுற்றிச் சுற்றி வருவார். ஆனால் இப்போது வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், அதை நான் ஒரு குறையாக சொல்லி சண்டை போட மாட்டேன்.அப்போது எல்லாம் பின்னாடியே சுத்துனீங்க ஆனால் இப்போ கண்டுக்கவே மாட்டிங்கறீங்க என்று சண்டை போட மாட்டேன். நாங்கள் இருவரும் இணைந்து இருக்கும் நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக செலவிடவே நினைப்பேன். பொல்லாதவன் படத்தில் சில காட்சிகள் எங்களது வாழ்க்கையில் நடைபெற்றவற்றைத்தான் வைத்திருந்தார்.

பொல்லாதவன் பிடிக்கல: எனக்கு ஆரஞ்சு நிறம் தான் மிகவும் பிடிக்கும், பொல்லாதவன் படத்தில் தனுஷ் நடிகை திவ்யா ஸ்பந்தனாவை நோக்கி இதெல்லாம் ஒரு கலராடி என்று கேட்பார். அது எல்லாம் எங்கள் காதல் காலத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு நாள் நானும் எனது மகன் மற்றும் மகள் இணைந்து பொல்லாதவன் படத்தைப் பார்த்தோம். எனது மகளுக்கு பொல்லாதவன் படம் சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் என்னமா அப்பா இப்படி எல்லாம் படம் எடுத்திருக்காரு என்று சொல்லிவிட்டாள். எனக்குமே பல காட்சிகள் எடுபடவில்லை. அதற்கு காரணம் இன்றைக்கு திரைப்பட இயக்கத்தில் அவர் அடைந்திருக்கும் உயரம் தான் என்று நினைக்கிறேன்.
நடிப்பு பயிற்சி: நான் இப்போது ஆக்டிக் கிளாஸ்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறேன். நடித்துப் பார்க்கலாமே என்ற ஆசைதான். வெற்றி மாறன் படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் நான் கட்டாயம் அதற்கு தயாரானேன். நான் நடித்த சில வீடியோக்களை கூட நான் அவரிடம் காட்டியதே கிடையாது, எனக்கு பயமாக உள்ளது" என்று தெரிவித்தார். மிகவும் ஜாலியாக கொடுத்த அவரது பேட்டி ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











