ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார்.. வேறு யாரும் இல்லை.. வேட்டையன் நடிகைகள் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாகவிருக்கிறது. ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு படத்துக்கு இருக்கும் சூழலில்; படத்தில் நடித்த அபிராமியும், துஷாரா விஜயனும் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கமர்ஷியலாகவும்; சமூக அக்கறையாகவும் இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருப்பார் என்று நம்பப்படுகிறது. படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ஹிட் படமாக அமையும் எனவும்; ஞானவேலின் கரியரில் முக்கியமான படமாக மாறும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

பிரத்யேக பேட்டி: படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் படத்தில் நடித்திருக்கும் அபிராமி மற்றும் துஷாரா விஜயன் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார்கள். அப்போது பேசிய அபிராமி, "நான் ரஜினிகாத்தின் திரைப்படத்தை தியேட்டரில் முதன்முறையாக பார்த்தது என்றால் தளபதி படம்தான். அந்தப் படத்தில் மிக அருமையாக நடித்திருப்பார். அதற்கு பிறகு 2001ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தினோம். அப்போதுதான் முதன்முறையாக அவரைப் பார்த்தேன்.
பாட சொன்னார்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு நாங்கள் பேருந்தில்தான் சென்றோம். அப்போது முன் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு கைடு போல இருந்தார். அப்போது என்னைப் பார்த்து சில பாடல்களை பாட சொன்னார். நானும் பாடினேன். அதனை என்னால் மறக்கவே முடியாது. வேட்டையன் செட்டில் நாங்கள் சந்தித்தபோதுகூட, இன்னமும் பாடிக்கொண்டுதான் இருக்கிறீர்களா என்று நியாபகம் வைத்து கேட்டார். எனக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. எனவே வேட்டையன் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னதும் ஓகே சொல்லிவிட்டேன்.
ஒரே சூப்பர் ஸ்டார்தான்: இந்தப் படத்தின் செட்டுக்கு எனது கணவர், குழந்தை, அம்மா வந்திருந்தார்கள். அப்போது எனது கணவரிடம் அவ்வளவு பணிவாக பேசினார். குழந்தையை கொஞ்சினார். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது ரஜினிகாந்த் மட்டும்தான். வேறு யாராலும் இருக்க முடியாது" என்றார். அதனை அருகில் இருந்த துஷாரா விஜயனும், ஆம் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்று தனது பேச்சை தொடங்கினார்.
ரஜினி படம் என்று தெரியாது: தொடர்ந்து பேசிய துஷாரா விஜயன், "படையப்பாதான் நான் தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம். அதில் வரும் வெற்றிக்கொடிக்கட்டு பாடல் எனது மோட்டிவேஷனல் பாடல். ராயன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோதுதான் எனக்கு ஞானவேல் ஆஃபிஸிலிருந்து ஃபோன் வந்தது. நேரில் சென்று கதை கேட்டேன். அதுவரை ரஜினி சார் படத்தில் நடிக்கப்போகிறோம் என்பது எனக்கு தெரியாது. இந்தப் படத்தில் எனது கேரக்டர் பிடித்ததாலும், ரஜினி சாரை பிடித்ததாலும் நடித்தேன்.
பாராட்டிய ரஜினிகாந்த்: அவரை முதன்முதலில் ஷூட்டிங்கில் பார்த்தபோது, சார்பட்டா பரம்பரையில் சூப்பராக நடித்திருந்தீர்கள் என்று பாராட்டினார். நட்சத்திரம் நகர்கிறது படத்தை பற்றியும் பேசினார். அதற்கு பிறகு டப்பிங்கில் பார்த்தபோது ராயன் பற்றி பேசிய அவர், 'நீங்கள் அடுத்த விஜயசாந்தி' என்று புகழ்ந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் சும்மா உட்கார்ந்திருந்தாலும் ஸ்டைலாகத்தான் இருக்கும். நான் தூரத்திலிருந்து அவரை பார்த்துக்கொண்டே ஸ்டைலு ஸ்டைலுதான் என்று பாடிக்கொண்டிருப்பேன். எல்லோரையும் கலாய்க்கிறீங்களே ம்மா என்று ஒருமுறை கேட்டார். உடனே நான், 'திண்டுக்கல் குசும்பு' சார் என்று சொன்னேன். அவர் அவ்வளவு சிம்ப்பிளாக இருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











