என் வலி எனக்குள் இருக்கு.. அதை யாருக்கும் கடத்தல.. விஜய் ஆண்டனி உருக்கம்.. ரசிகர்கள் ஆறுதல்
சென்னை: விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். இசையமைப்பாளராக மட்டும் வலம் வந்துகொண்டிருந்த அவர் நான் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர் தற்போது ஹிட்லர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு உருக்கமாக பேசியிருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ’நாக்க முக்க’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் பாடலின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி இசையமைப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.

ஹீரோவான விஜய் ஆண்டனி: இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி ’நான்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த ’சலீம்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.
இயக்குநரான விஜய் ஆண்டனி: பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங்போதுதான் விஜய் ஆண்டனி விபத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள முடியாத துயரம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்ட அவருக்கு மீள முடியாத துயரமாக அமைந்தது அவரது மகள் மீராவின் மரணம். ஏதோ காரணத்தால் கடந்த வருடம் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் காரணமாக விஜய் ஆண்டனி உடைந்தே போய்விட்டார். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஹிட்லர் படத்தில் நடித்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் கொலை படம் வெளியானது.
விஜய் ஆண்டனி பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், “எனது வாழ்க்கையில் நிறைய இழப்புகளை என்னால் உணர முடிகிறது. அதை எளிதாக கடக்கிறேன் என்று சொல்ல முடியாது. எனக்குள் நிறைய உணர்வுகளை அடக்கியிருக்கிறேன். இதுதான் வாழ்கை என்று நினைக்கையில் வித்தியாசமாக இருக்கிறது. எனக்குள் இருக்கும் வலியை நான் யாருக்கும் கடத்தவில்லை. வலி என்பது கண்டிப்பாக இருக்கும். அது இல்லாவிட்டால் நாம் மரத்துப்போய்விடுவோம். வலி இல்லாமல் மகிழ்ச்சியை தெரிந்துகொள்ள முடியாது.
யாரும் புரிந்துகொள்ள முடியாது: வாழ்க்கையை யாருமே கண்டிப்பாக புரிந்துகொள்ளவே முடியாது. வேறு வழியில்லாமல் வந்துவிட்டோம். நான் அனைத்தையும் விட்டுவிட தயார். தனி மனிதன் என்ற ஒன்று இங்கு இல்லவே இல்லை. பலரின் பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன். பலருக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வேலையை நான் எப்போதெல்லாம் பிடிக்காமல் செய்கிறேனோ அப்போதெல்லாம் இரண்டு மடங்கு சின்சியராக இருப்பேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











