செகண்ட் ஹாஃப் கேட்டுட்டு விஜய்க்கு பிடிக்கல.. அவர் சொன்னது போலவே படம் ஓடல.. சுந்தர். சி ஓபன் டாக்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் உள்ளிட்ட பலரை வைத்து சுந்தர் சி படங்களை இயக்கியுள்ளார். ஆனால் தளபதி விஜய்யை வைத்து இதுவரை ஒரு படம் கூட அவர் இயக்கவில்லை. அந்த குறை இன்னமும் தனக்கு இருப்பதாக சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
சுந்தர் சி -யின் மனைவி குஷ்பு உடன் நடிகர் விஜய் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். மின்சாரக் கண்ணா படத்தில் குஷ்புக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் அதன் பின்னர் பிரபுதேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த வில்லு படத்தின் அறிமுக பாடலிலும் குஷ்பு நடனமாடி இருப்பார். வாரிசு படத்தில் குஷ்பு நடித்த காட்சிகள் படம் வெளியாகும் போது நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஜய் நடிக்க வேண்டியது. ஆனால் அவர் நடிக்க வேண்டிய படத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதில் அஜித் நடித்ததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக மீண்டும் விஜய்க்கு கதை சொன்னேன் என்றும் அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை என்றும் சுந்தர் சி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் டாப் நடிகர்கள்: ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றவர் சுந்தர் சி. அதேபோல கமல்ஹாசனை வைத்து ஹிட் கொடுக்கலாம் என நினைத்து அன்பே சிவம் படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. பல ஆண்டுகள் கழித்து அது ஒரு கல்ட்டு கிளாசிக் திரைப்படம் என பலராலும் கொண்டாடப்பட்டாலும் அப்போது அந்த படம் ஓடவில்லை. அஜித்தை வைத்து உன்னைத்தேடி படத்தை சுந்தர் சி இயக்கினார். பிரசாந்தை வைத்து வின்னர் படத்தையும் அவர் இயக்கினார். ஆனால், விஜய்யை வைத்து இதுவரை ஒரு படம் கூட அவர் இயக்கவில்லை.
செகண்ட் ஹாஃப் பிடிக்கல: உன்னைத்தேடி படத்திலேயே விஜய் நடிக்க வேண்டியது என்றும் கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அஜித் நடித்தார் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு படத்தின் கதையை முதலில் விஜய்க்கு சொல்லி இருந்தேன். முதல் பாதியை கேட்ட நடிகர் விஜய் நல்லா இருக்குன்னு சொல்லி கை கொடுத்தார். அடுத்து 2ம் பாதி கதையை கேட்டு முடித்ததும் அவருக்கு பிடிக்கவில்லை.
விஜய் கணிப்பு கரெக்ட்: என்னோட கதையை நல்லா இல்லைன்னு சொல்றீங்களா? இதை எடுத்து ஹிட் ஆக்கி காட்டுறேன் பாருங்க என வெறியோடு அந்த படத்தை இயக்கினேன். ஆனால், விஜய்யின் கணிப்பு சரியாக இருந்தது. அந்த படமும் ஓடாமல் தோல்வியை தழுவியது என்றார் சுந்தர். சி. அந்த படத்தின் பெயரை சொல்ல முடியுமா என தொகுப்பாளர் கேட்க, வேண்டாம் அந்த படத்தில் நடித்த ஹீரோ ஃபீல் பண்ணுவார் என மறுத்து விட்டார்.
விஷாலின் ஆக்ஷன்: அந்த பேட்டிக்கு கீழ் கமெண்ட் பக்கத்தில் விஷாலின் ஆக்ஷன் படக் கதை தான் அது என்றும் நல்லவேளை விஜய் நடிக்கவில்லை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விஜய்யை வைத்து சுந்தர். சி காமெடி படத்தை கொடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











