”நான் பாவியைப் போல உணர்கிறேன்” லாபம் பிரஸ்மீட்டில் கண் கலங்கிய விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ!
சென்னை: "இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா.. அவர் கூட இன்னும் நிறைய நேரம் செலவழித்து இருப்பேன். நான் ஒரு பாவியைப் போல உணர்கிறேன்" என நேற்று நடைபெற்ற லாபம் பிரஸ் மீட்டில் நடிகர் விஜய்சேதுபதி கண் கலங்கிப் பேசியது ரசிகர்களை உருக வைத்துள்ளது.

மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் திரைப்படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டும் இன்னும் புதுப் படங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு லாபாம் படம் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட பிரஸ் மீட்டில் நடிகர் விஜய்சேதுபதி மிகவும் உருக்கமாக பேசி கண் கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இயற்கை, ஈ, புறம்போக்கு எனும் பொதுவுடைமை படங்களை இயக்கிய இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் கடைசியாக உருவான படம் லாபம்.
ஆனால், அந்த படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த போது உடல் நலக் குறைவு காரணமாக இயக்குநர் ஜனநாதன் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்றைய பிரஸ் மீட்டில் பேசிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தான் ஒரு பாவியை போல உணர்கிறேன் என்றும், ஜனநாதன் ஒரு தலைவர் என்றும், அப்பா உயிரோடு இருக்கும் போது மகனுக்கு அவர் அருமை தெரியாது. ஆனால், உள்ளுக்குள் பாசம் இருக்கும். அதே போன்ற உறவு தான் எனக்கும் அவருக்கும். இப்படி வாழ்க்கை நிரந்தரமற்றதாக இருக்கும் என தெரிந்திருந்தால் அவருடன் இன்னும் நிறைய நேரத்தை செலவழித்து இருப்பேன் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
லாபம் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். படத்தின் புதிய டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் முதலாளித்துவத்தின் மோசடிகளையும் எடுத்து உரைக்கும் படமாக இந்த லாபம் உருவாகி உள்ளது.
வரும் செப்டம்பர் 9ம் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. செப்டம்பர் 10ம் தேதி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் தலைவி படமும் தியேட்டரில் வெளியாகிறது. இதனால், இந்த இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ஜனநாதனின் லாபம் படம் மட்டுமின்றி இந்த மாதம் விஜய்சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி மற்றும் கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களும் ரிலீசாக காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











