புலிக்கு பல் விலக்கி விட சொன்னாங்க.. ஹோட்டலில் எச்சில் இலை எடுத்தேன்.. ஓபனா பேசிய புகழ்!
சென்னை:என்னவளே, சீனியர் ஜூனியர் என மாதவன், மம்மூட்டியை எல்லாம் வைத்து ஒரு காலத்தில் படங்களை இயக்கி வந்த சுரேஷ் பல ஆண்டுகள் கழித்து குக் வித் கோமாளி பிரபலம் புகழை வைத்து படம் இயக்கி உள்ளார். மிஸ்டர் ஜூ கீப்பர் எனும் வித்தியாசமான டைட்டிலில் உருவாகி உள்ள இந்த படத்தில் நிஜ புலியை நடிக்க வைத்து படத்தை இயக்கி இருப்பதாக புகழ் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் அஜித்தின் வலிமை, விஜய்சேதுபதியின் டிஎஸ்பி, சந்தானத்துடன் சபாபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். காமெடி நடிகர்களான சந்தானம், யோகி பாபு, சூரி உள்ளிட்டோர் ஹீரோக்களாக நடித்து வரும் நிலையில், புகழும் தற்போது ஹீரோவாக மாறி உள்ளார்.

நிஜ புலி: இந்த படத்தில் விலங்குகள், பறவைகள் துன்புறுத்தப்படவில்லை என டைட்டில் கார்டு போடுவார்கள். மேலும், கிராபிக்ஸ் மூலமாகத்தான் விலங்குகள், பறவைகள் உருவக்கப்பட்டன என்றும் பதிவிடுவார்கள். ஆனால், மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் நிஜ புலியுடன் நடித்து மிரட்டியிருக்கிறார் புகழ். இந்த படத்திற்காக பேசிய இயக்குநர் அதன் பின்னர் தன்னிடம் பேசவே இல்லை என்றும் அப்புறம் ஒரு வருஷம் கழித்து புலி கிடைச்சிடுச்சு காட்டுக்கு கிளம்பி வாங்கன்னு ஒரு போன் பண்ணாரு, அங்கே போய் பார்த்தால் லைஃப் இன்சூரன்ஸ், ஆம்புலன்ஸ்லாம் ரெடியா இருக்கா, இந்த தம்பி தான் புலி கூட நடிக்கப் போறாருன்னு கேட்டு ஒரு க்ரூப் பேசியது என்னை ரொம்பவே பயப்பட வைத்தது என்றார்.
புலிக்கு பல் விலக்கிவிட சொன்னாங்க: புலி மீது படுத்து பழகுங்கன்னு இயக்குநர் ரொம்ப கேஷுவலா சொன்னார். புலியை பயப்படாம பாருங்கன்னு சொன்னாரு, புலியை எப்படி பயப்படாம பார்க்கிறது. அது என்னை பார்க்காம இருக்கணும்னு ரொம்பவே பயந்து பயந்து நடிச்சேன். இடையே மான்டேஜ் ஷாட் எடுக்கிறேன்னு இந்த அசிஸ்டன்ட் இயக்குநர்கள் புலிக்கு பல் எல்லாம் விலக்கி விட சொன்னாங்க, புலி என்னைக்குடா பல் விலக்குச்சு என்னை கலாய்க்கிறீங்களான்னு கேட்டு அந்த சீனை பண்ணல, அப்புறம் புலிக்கு கேக் ஊட்டி விட சொன்னாங்க, புலி வாயை திறந்தால், நானும் ஹீரோயினும் உள்ளே போயிடுவோம் அந்த அளவுக்கு பெருசா இருக்கு என சூட்டிங் அனுபவத்தை மேடையிலேயே நகைச்சுவையாக சொல்லி அரங்கத்தை சிரிக்க வைத்தார் புகழ்.
எச்சிலை எடுத்தேன்: பிரசாத் ஸ்டூடியோ எதிர்ல இருக்குற காவேரி தெருவுல ஒரு வாட்டர் வாஷ் கடையில வண்டி கழுவிட்டு இருந்தேன். அதே தெருவுல இருக்குற முத்துலட்சுமி ஹோட்டல்ல எச்சிலை எடுத்துட்டு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று பிரசாத் ஸ்டூடியோவில் என்னுடைய பட புரமோஷன் விழா என்பதே எனக்கு சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உழைச்சிருக்கோம். படம் உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்னு நினைக்கிறேன் பார்த்து சப்போர்ட் பண்ணுங்க என உருக்கமாகவும் உண்மையாகவும் பேசியிருக்கிறார் புகழ்.
சூரி அட்வைஸ்: இங்கே ஜெயிக்கிறதை விட நிக்கிறது ரொம்ப கஷ்டம் தம்பி என நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சூரி புகழுக்கு அட்வைஸ் பண்ணியிருந்தார். நானும் உன்னை போல தான் கஷ்டப்பட்டு வந்தேன். உன்னோட கஷ்டம் எனக்குத் தெரியும். தொடர்ந்து போராடிட்டே இரு, உனக்கான இடம் கிடைக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











