ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது ஏன்?: விஜய் சேதுபதி விளக்கம்
சென்னை: ரசிகர்களை சந்தித்தால் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது ஏன், அந்த பழக்கம் எப்படி துவங்கியது என்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நாள் ஹீரோவானார் விஜய் சேதுபதி. கஷ்டப்பட்டு உழைத்து தற்போது கோலிவுட்டின் பிசியான இல்லை இல்லை படுபிசியான ஹீரோவாக உள்ளார் அவர்.
தமிழ் படங்களில் நடிக்கவே அவருக்கு நேரம் இல்லை இதில் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி தன்னை சந்திக்கும் ரசிகர்களை கட்டிப்பிடித்து கன்னத்தில் நச்சென்று முத்தம் கொடுப்பார். அவரிடம் முத்தம் வாங்கவே பல ரசிகர்கள் முந்தியடிக்கிறார்கள். எந்த ரசிகர் வந்தாலும் விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது எல்லாம் நடிப்பு என்ற பேச்சும் எழுந்தது. ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

அன்பு
நான் ரசிகர்கள் யாரையும் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் நன்றாக உடை அணிந்திருக்கிறார்களா இல்லையா என்பது எனக்கு முக்கியம் இல்லை. அவர்கள் அன்புடன் என்னை சந்திக்க வருகிறார்கள். நானும் பாசத்துடன் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறேன் என்று விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முத்தம்
நான் நடிக்க வந்த புதிதில் இரண்டு ரசிகர்கள் என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தனர். அப்பொழுது அவர்கள் தங்களை முத்தமிடுமாறு கேட்டனர். அந்த புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட அவை வைரலாகின என்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பவர்கள் அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், வாட்ஸ்ஆப்பில் டிபியாகவும் வைக்கிறார்கள்.

மலையாளம்
என்னை சந்திக்க வருபவர்களை நான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறேன். அன்புக்கு சக்தி அதிகம் என்று நம்புபவன் நான். நான் இதை வேண்டும் என்றே செய்யவில்லை, தானாக நடக்கிறது என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். விஜய் சேதுபதி மார்கோனி மதாய் என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் மலையாள படம் இது. இந்த படத்திற்காக அவர் மலையாளம் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











