தொடர்ந்து ஆங்கில தலைப்பு ஏன்?.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ தயாரிப்பாளர் சொன்ன விஜய் மேட்டர்!
சென்னை: கடந்த ஆண்டு குறைந்த பொருட்செலவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள 'வித் லவ்' (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஷன் ஜீவிந்தின் உதவி இயக்குநரான மதன் இந்த படத்தை இயக்கி இயக்குநரகா அறிமுகமாகிறார்.

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, சென்சார் பிரச்னை, ஆங்கில தலைப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கு படக்குழு அளித்த பதில்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
சென்சார் போர்டை மதிக்கணும்: சென்சார் போர்டு திரைப்படங்களின் கருத்து சுதந்திரத்தை சமீப காலமாக நசுக்குவது போன்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஒரு தயாரிப்பாளராக உங்க கருத்தை சொல்லுங்க என செளந்தர்யா ரஜினிகாந்திடம் கேட்க, சென்சார் போர்டு என்பது இப்போ புதிதாக வந்தது கிடையாது. காலம் காலமாக உள்ளது. என்னை பொறுத்தவரையில் சென்சார் போர்டை மதிக்க வேண்டும். அதை தாண்டி அது பற்றிய கருத்து ஏதும் கூறவில்லை என பேசினார்.
ஆங்கில தலைப்பு ஏன்?: இது தமிழ் சினிமாவா? அல்லது ஆங்கில சினிமாவா? என்று அஞ்சும் அளவுக்கு தொடர்ந்து ஆங்கில தலைப்புகளே வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு அஜித் குமாரின் குட் பேட் அக்லி, பிரதீப் ரங்கநாதனின் டிராகன் மற்றும் டியூட், அபிஷன் ஜீவிந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி என பல படங்கள் ஆங்கில தலைப்புகளிலேயே வெளியாகின. இந்த பிப்ரவரி மாதமும் வித் லவ், பூக்கி, யூத் என அடுத்தடுத்து ஆங்கில தலைப்புகளிலேயே படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படங்களுக்கு தொடர்ந்து ஆங்கில தலைப்புகள் மட்டுமே வைக்கப்படுவது ஏன்? என்கிற கேள்வி எழுந்தது.

விஜய் பட டைட்டில் தான் கேட்டோம்: குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தயாரித்த மகேஷ் தயாரிப்பில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள வித் லவ் திரைப்படமும் ஆங்கில தலைப்பில் உள்ள நிலையில், அந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் மகேஷ், இந்த படத்துக்கு ப்ரியமுடன் (விஜய் நடித்த) தலைப்பு தான் கேட்டோம். ஆனால், அது கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த டைட்டில் என்றார். புது இயக்குநர்களுக்கு சொந்தமாக தமிழ் தலைப்பு கூட உருவாக்க முடியவில்லையா? என்கிற கேள்வியும் பான் இந்தியா பிசினஸ் மற்றும் தமிழ், தெலுங்கு மார்க்கெட்டை முன்னிறுத்தி ஆங்கில தலைப்புகள் அதிகரித்து வருகிறதா? என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











