இரும்பன் பட விவகாரம்.. தன்னுடைய படத்திற்கு தானே தடை கேட்ட இயக்குநர்.. கதறி அழுத கீரா!
சென்னை : தன்னுடைய மூன்றரை வருட கனவு மற்றும் உழைப்பு இரும்பன் படம் என்று படத்தின் இயக்குநர் கீரா தெரிவித்துள்ளார்.
தமிழ் பாலா மற்றும் வினோத்குமார் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்பன் படத்தில் சம்பள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யோகி பாபு லீட் கேரக்டரில் நடித்துள்ள இரும்பன் படம் பல்வேறு பிரச்சினைகளை மீறி நேற்றைய தினம் ரிலீசாகியுள்ளது.

யோகிபாபுவின் இரும்பன் படம்
யோகிபாபு, ஜூனியர் எம்ஜிஆர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்து நேற்றைய தினம் ரிலீசாகியுள்ளது இரும்பன் படம். காமெடியனாக வலம்வந்துக் கொண்டிருக்கும் யோகிபாபு, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், இந்தப் படத்தில் அவர் நாயகனாக களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கீரா இயக்கியுள்ளார். இந்தப்படத்தை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள பாக்கி விவகாரம்
இந்நிலையில் தனக்கும் படத்தில் டெக்னீசியன்களுக்கும் தயாரிப்பாளர் தரப்பு சம்பளம் தரவில்லை என்றுக்கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் கீரா. இந்த வழக்கில் தற்போது கீராவிற்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தடைகளையும் தாண்டி இரும்பன் படமும் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.இதனிடையே நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த கீரா, தன்னுடைய படத்தின் ரிலீஸ் சமயத்தில் ரசிகர்களுடன் சென்று படத்தை பார்க்க வேண்டிய தான் தற்போது தன்னுடைய படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சம்பளத்தை தர நீதிமன்ற உத்தரவு
தனக்கு முன்னதாக 20 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் ஆனால் 5 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே தரப்பட்டதாகவும் கீரா புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு தர வேண்டிய 16 ஆயிரத்து 20 ஆயிரம் ரூபாயை 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் கட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தவறினால் படத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்படும் என்றம் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

4 ஆண்டு கனவு + உழைப்பு
இந்நிலையில் கீரா பத்திரியாளர்களிடம் பேசுகையில், தான் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் செயல்பட்டுவருவதாகவும், ஆனால் இந்தப் படத்தின் போஸ்டர்களில் தன்னுடைய பெயர் இடம்பெறாமல் தயாரிப்பாளர்கள் செய்துள்ளதாகவும் தன்னுடைய பெயரை கெடுக்கப் பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். தன்னுடைய கனவு மற்றும் உழைப்பில் உருவான இரும்பன் படத்திற்கு தானே தடை கேட்கும் நிலைக்கு தன்னை தயாரிப்பாளர்கள் தள்ளிவிட்டதாகவும் அவர் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
கதறி அழுத கீரா
படத்தின் முதல் பிரதியை தான் கொடுத்தவுடனேயே தன்னுடைய சம்பள பாக்கி செட்டில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் அதுபோல நடக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தான் இயக்குநர் சங்கத்தில் மெம்பராக இல்லாத காரணத்தால் தனக்கு எப்படி சம்பள பாக்கியை பெறுவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்த கீரா, இந்த பேட்டியின்போது கதறி அழுதார்.


Click it and Unblock the Notifications











