Tamil»Movies»2.0»Critics Review

  விமர்சகர்கள் கருத்து

  • படத்தின் திரைக்கதை ஏறக்குறைய அந்நியன் ஸ்டைலில் பழி வாங்கும் படலம், அதனை துப்பறியும் குழு என இருக்கிறது. ஆனால், அப்படம் போல இடையிடையே காதல் காட்சிகள் இல்லை. முதல் காட்சியிலேயே அக்‌ஷய்குமார் தற்கொலை செய்து கொள்ள, அடுத்த காட்சியில் டிரெய்லரில் காட்டிய செல்போன் பறக்கும் காட்சிகள் வருகிறது. இதனால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை சரி செய்ய வசீகரனின் உதவியை கோருகிறது அரசு. சிட்டியின் உதவியுடன் மட்டுமே இந்தப் பிரச்சினையை சரி செய்ய முடியும் என்கிறார் வசீகரன். இதனால் மீண்டும் சிட்டி உயிர் பெறுகிறது. இப்படியாக முதல் பாகத்தின் இறுதியில் இருந்து 2.0 படத்தின் கதை ஆரம்பமாகிறது.

   வசீகரன், சிட்டி, குட்டி மினிபோட்ஸ் 3.0 என மூன்று கதாபாத்திரங்களில் மிரட்டி இருக்கிறார் ரஜினி. சிட்டிக்காக ரஜினி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னை விட்டுப் போகல என நீலாம்பரி மாதிரி நம்மை மைண்ட் வாய்ஸ்சில் பேச வைக்கிறார் வசீகரன் ரஜினி.

   படம் முழுவதையும் ரஜினி ஆக்கிரமித்திருக்கிறார் என்றாலும், சிட்டி மிரட்டல் என்றால். 3.0 வாக வரும் குட்டி ரஜினி கலக்கல். அந்தக் கதாபாத்திரம் செய்யும் வாலுத்தனங்கள் ரசிக்க வைக்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் செம எண்டர்டெயினராக இருக்கிறது. இணையத்தில் டிரெண்டிங் ஆன இந்திர லோகத்து சுந்தரியே படத்தின் இறுதிப் பாடலாக வருகிறது.

   ரோபோவாக எமி. நிலா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் உதவியாளராக கலக்கியிருக்கிறார். இந்தப் படத்திலாவது அவருக்கு நடிக்கும்படி நல்ல கதாபாத்திரம் அமைந்ததே என்பது ஆறுதலான விசயம். அடிக்கடி ஜோக் கூறி கிச்சு கிச்சு மூட்டுகிறார். அதிலும் அந்த கமல் டயலாக் ஆசம். விஜயசாந்தியைப் போல் பைட் சீன்களில் அதகளம் பண்ணுகிறார். இவ்வளவு திறமையான நடிகையை இத்தனை நாள் அழகுப் பொம்மையாக நடிக்க வைத்து விட்டார்களே என ஆதங்கப்பட வைக்கிறார் எமி.

   பக்‌ஷராஜனின் ப்ளாஷ்பேக் காட்சிகள் எமோசனலாக உள்ளது. பறவைகள் மீது ஆர்வம் கொண்ட பேராசிரியராக வேற லெவல் நடிப்பைக் காட்டி இருக்கிறார் அக்‌ஷய். தற்கொலை செய்து கொண்ட அக்‌ஷய் எப்படி சூப்பர்நேச்சர் பவருடன் திரும்பி வருகிறார் என்பது தான் கொஞ்சம் குழப்புகிறது. அவர் ஆவியா இல்லை அவரும் ரோபோவா என்பது சட்டென புரியவில்லை.

   சிட்டி - எமி - அக்‌ஷய் சண்டைக்காட்சி மிரள வைக்கிறது. ஹாலிவுட் பட சண்டைக்காட்சிகளுக்கு இணையாக இதனை உருவாக்கி இருக்கின்றனர். இதெல்லாம் நடக்குமா, சாத்தியமா என்ற கேள்விகளை ஓரம்கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் கண்களுக்கு விஷுவல் விருந்தாக கடந்து போகிறது காட்சிகள். நீரவ்ஷா ஒளிப்பதிவில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

   ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் பின்னணி இசையிலும், பாடல்களிலும் கடும் உழைப்பைத் தந்திருக்கின்றனர். சின்னச் சின்னச் சத்தங்களுக்காகவும் அவர்கள் மெனக்கெட்டிருப்பது படத்திற்கு நல்ல பலனைத் தந்துள்ளது.

   வானில் செல்போன்கள் பறக்கும் காட்சி, வனப்பகுதி முழுவதும் செல்போன்களால் ஒளிரும் காட்சி, ராட்சத பறவை திரையில் வரும் காட்சி என பல காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதற்கான அவர்கள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள் என நினைத்துப் பார்ப்பதே மலைப்பைத் தருகிறது. படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பற்றிச் சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்.

   படம் ஆரம்பித்தது முதல் கண்களை அங்கும் இங்கும் நகர்த்த முடியாதபடி காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. தேவையில்லாத காட்சிகள் எதுவுமே படத்தில் இல்லாதது ஆறுதலான விசயம். துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வெளியேறுவது போல, காட்சிகள் டக்டக்கென மாறிக் கொண்டே செல்கிறது.

   இவ்வளவையும் சொல்லி விட்டு, ஐஸ் பற்றிச் சொல்லவில்லையே என உங்கள் குரல் கேட்கிறது. நாம் ஏற்கனவே கூறியது போல, எந்திரனில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா இப்படத்தில் இருக்கிறார், ஆனால் இல்லை. இதிலும் அவர் வசீகரனின் காதலியாகவே வருகிறார். முதல் பாகத்தில் வசீகரன் காதலைப் பற்றி பேசிய ஷங்கர், இதில் சிட்டி-நிலா காதலை காட்டியிருக்கிறார்.

   படத்தின் இறுதி 30 நிமிடங்கள் ஒவ்வொரு சினிமா ரசிகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காட்சிகள். திரைக்கதையில் சில நெருடல்கள் உள்ளபோதும், அவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் படம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டிருப்பதை அனுபவிக்க முடியும்.

   ஷங்கரின் இந்த வித்தியாசமான முயற்சியைப் பாராட்டலாம். இப்படியான முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது மறுக்க இயலாத உண்மை.

   போகிறபோக்கில் கிளைமாக்ஸில் எந்திரனின் மூன்றாவது பாகம் 3.0 வரும் என்பதை சொல்லிச் சென்றிருக்கிறார் ஷங்கர். ஆனால், இப்படத்திற்கே மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆனது. அப்படிப்பார்த்தால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து ரஜினி - ஷங்கர் கூட்டணியில் மீண்டும் ஒரு மிரட்டல் படமாக 3.0 படம் வரும் என எதிர்பார்க்கலாம்.