twitter
    Tamil»Movies»96»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பள்ளியில் படிக்கும் போது காதலித்து பிரிந்த இருவர், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது நடக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வே 96 திரைப்படம்.

      வாழ்வின் பொக்கிஷமான அந்த பள்ளி நாட்களின் நினைவுகளை நம் மனதில் மீண்டும் கொண்டு வரும் விதத்தில் வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர் பிரேம். சண்டை காட்சிகள் இல்லை, அதீத ரொமான்ஸ் காட்சிகள் இல்லை, வில்லன் இல்லை... வாய்ச் சண்டைக் கூட இல்லை, படம் மெதுவாக தான் நகர்கிறது. ஆனாலும் இருக்கையைவிட்டு எழும் மனம் வரவில்லை.

      விஜய் சேதுபதி... இவர் என்ன செய்தாலும் ரசிக்க முடிகிறதே... எப்படி என்பது தான் தெரியவில்லை. ஒரு காட்சியில் விஜய் சேதுபதியை பார்த்து திரிஷா 'நீ ஒரு சரியான நாட்டுக்கட்டைடா" என்பார். அதற்கு விஜய் சேதுபதி கொடுக்கும் வெட்கம் கலந்த சிரிப்பு ரியாக்ஷன் இருக்கே.... ச்சே வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படி ரசித்திருப்போமா என தெரியவில்லை. விஜய் சேதுபதியின் நடிப்பை இந்த ஒரு பாராவுக்குள் விவரிக்க முடியாது. விவரிக்க தொடங்கினால் ஒரு கட்டுரை போதாது.

      விஜய் சேதுபதி - திரிஷாவின் பள்ளி பருவக் காட்சிகளில் நடித்திருக்கும் ஆதித்தனும், ஜானுவும் சீனியர்களை தூக்கி சாப்பிடுகிறார்கள். ஜானுவின் ஒவ்வொரு கண்னசையும் கவிதை. பகவதி பெருமாள், தேவதர்ஷிணி என படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் மரட்டியிருக்கிறார்கள். தேவதர்ஷிணியின் மெச்சூர்டான அந்த நண்பி கதாபாத்திரம் அருமை.

      இயக்குனருக்கு இணையாக படத்தில் சம பங்கு வகித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் சண்முகமும், இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தாவும். பின்னணி இசையால் திரையில் தோன்றும் நடிகர்களின் மனநிலையை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் கோவிந்த். பாடல்கள் எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தாலும், இளையராஜா தான் ஆக்கிரமித்துக் கொள்கிறார். தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது 'தென்றல் வந்து தீண்டும்போது' பாடலை தான் வாய் முணுமுணுக்கிறது.

      படம் அநியாயத்துக்கு மெதுவாக நகர்வது மட்டுமே கொஞ்சம் அயர்வை தருகின்றது. ஆனால் விஜய் சேதுபதியும், திரிஷாவும் அதை பேலன்ஸ் செய்துவிடுவதால், சிறிது நேரத்தில் அந்த குறையும் காணாமல் போகிறது.

      பள்ளி பருவ சந்தோஷ நினைவுகளை மீட்க நினைக்கும் எல்லோரும் இந்த 96க்கு போய் வரலாம். படம் வெளிவந்த பிறகு ரீயூனியன்கள் அதிகம் நடப்பது நிச்சயம்.