twitter
    Tamil»Movies»Aan Devathai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • காட்சிக்கு காட்சி அட்வைஸ் மழை பொழியும் நாயகன் கதாபாத்திரம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. ஏற்கனவே முந்தைய நிறைய படங்களில் சமுத்திரக்கனியை இதே போன்ற கருத்துக் கந்தசாமி கதாபாத்திரத்தில் பார்த்திருப்பதால் இளங்கோவின் வசனங்கள் பல இடங்களில் மனதைத் தொடவில்லை. சமுத்திரக்கனி வரும் காட்சிகளில் எல்லாம், 'அய்யய்யோ இப்போ என்ன பேசப் போகிறாரோ?' என்ற பீதியே உருவாகிறது. ஆனால் இதுவும் பழைய விசயம் தான் என்றாலும், வழக்கம்போல் பொறுப்பான தந்தையாக பாராட்டுகளை அள்ளுகிறார், 'சபாஷ்'கனி.

      'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரம். ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள். பிக் பாஸ் புகழ் சுஜா வருணி, எப்படியெல்லாம் ஆடம்பரமாக வாழக்கூடாது என வாழ்ந்து காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, இளவரசு, அனுபமா, அறந்தாங்கி நிஷா என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

      குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, தேவையில்லாத ஈகோ, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், பணிபுரியும் இடத்தில் பாலியல் சீண்டல், கடன் தொல்லை என படத்தில் நிறைய நல்ல கருத்துகளை தேவையான அளவுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக நிச்சயம் இயக்குநரைப் பாராட்டலாம்.

      ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வருமானத்திற்கு ஏற்ப சிக்கனமாக வாழ்ந்தால் குடும்பம் சிறக்கும் என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம். தொலைக்காட்சி சீரியல்களே படுவிறுவிறுப்பாக மாறிவிட்ட இன்றைய சூழலில், பழைய மெகா சீரியல் பாணி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்திவிடுகிறது.

      பெருநகர கார்ப்பரேட் கலாச்சாரப் பாதிப்பை பேசியிருக்கும் இந்த 'ஆண் தேவதை' நமக்கு அட்வைஸ் வரம் அளிக்கிறான்.