twitter
    Tamil»Movies»Balloon»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஜெய், அஞ்சலி, யோகிபாபு, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற திகில் திரைப்படம் 'பலூன்'. ரொமான்ஸ் காமெடி வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ஜெய் இந்தப் படத்தின் மூலம் ஹாரர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களின் திகில் கதையாக வெளிவந்த 'பலூன்' ரசிகர்கள் மத்தியில் பறந்ததா இல்லை புஸ்ஸானதா..? வாங்க பார்க்கலாம்.

      குழந்தை தூக்கிப் போடப்பட்ட கிணற்றில் இருந்து பலூன்கள் இரவில் பறப்பது, பொம்மையின் தலை திரும்புவது, தானாக எரியும் லைட், அசையும் சேர் என பேய்க்கதைகளின் க்ளிஷேதான். படத்தின் டைட்டில் கார்டிலேயே 'அனபெல்', 'இட்', 'ஜான்ஜூரிங்' உள்ளிட்ட சில படங்களிலிருந்து இன்ஸ்பயர் ஆனதாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் பேய்ப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த காட்சிகளாகத் தான் இருக்கிறது. படத்தின் காட்சியமைப்பிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் தெரிகிறது. வீட்டிற்குள் இருக்கும் நால்வரை மட்டுமே பயமுறுத்தும் காட்சிகளே திரும்பத் திரும்ப வருவது அலுப்பு. திடீரென தோன்றும் சத்தம், உருவம் திடீரென தோன்றி மறைவது என இந்தப் பேய் வன்முறை இல்லாத பேயாக இருப்பதாலோ என்னவோ பார்வையாளர்களுக்கு அந்தளவுக்கு பயத்தையும் ஏற்படுத்தவில்லை.

      படத்தின் தொடக்கத்தில், சினிமா தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பகடியாக வைத்த காட்சி ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் கலகலப்பூட்டும் கேரக்டர் யோகிபாபு. பாடி லாங்வேஜ், டோன் மூலமே சிரிக்க வைக்கிறார். ஜெய்யின் அண்ணன் மகன் பப்பு யோகிபாபுவை கலாய்க்கும் காட்சிகள் செம்ம. யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெய். ஜோக்கர் வேடத்தில் நடக்கும் ஸ்டைலை சூப்பராக காப்பி அடித்திருக்கிறார். அஞ்சலி அழகாக வந்து படத்திற்குத் தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் வரும் ஜனனி ஐயரும் ஈர்த்திருக்கிறார். சாதி அரசியல், அரசியலுக்கு வருவதற்காக சாதிக்குள் ஏற்படுத்தும் சுயநலவாதம், தவறுகள் என சில அரசியல்வாதிகளை இப்படத்தில் விமர்சித்திருக்கிறார்கள்.

      யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். 'மழை மேகம்' பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மூலம் பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். மெதுவாக நகரும் கதைக்கு கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கிறது யுவனின் பின்னணி இசை. ஹாலிவுட் பேய்ப்படங்களில் பயன்படுத்தப்படும் விசில் சத்தங்களை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். இரவுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள், அமானுஷ்யம் காட்டுவதற்காக லைட் டோனில் எடுக்கப்பட்ட காட்சிகள் என பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு குறைசொல்லும்படியாக இல்லை.

      வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசம் காட்ட முயல்வதாகக் காட்டிக் கொண்டாலும், படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறை. ஹாலிவுட் பேய்ப்படங்கள் பார்த்துப் பழகியவர்களுக்கு இந்தப் படம் பாஸிங்கில் கடந்து போகும். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இல்லை.. காட்டேரி போல முக அமைப்புகளுடன் பயமுறுத்தும் பேய் இல்லை.. ஆனால் ரசிகர்களை பயமுறுத்தவும் வேண்டும் என்றால், இந்த அளவுக்குக் கொடுத்திருப்பதே ஆறுதல் தான். 'பலூன்' - பழகிய பேய்!