twitter
    Tamil»Movies»Genius»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு குறும்படத்துக்கான கான்செப்டை வைத்துக்கொண்டு, தனது திறமையான திரைக்கதையால் முழுநீளப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை என்பதால், பார்வையாளர்கள் மிக எளிதாக படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.

      மதிப்பெண்கள் தான் முக்கியம் என்பது பல பெற்றோர்களின் மனதில் ஆழமாக புதைந்து போன கருத்து. மற்ற குழந்தைகளைவிட நமது குழந்தைகள் பின் தங்கி விடக்கூடாது என்பதே அவர்களது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்காக ஒரு அப்பா எந்த எல்லை வரையும் செல்வார் என்பதை நரேனின் கதாபாத்திரம் தெளிவாக உணர்த்துகிறது.

      முதல்பாதியில் நேர்கோட்டில் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் ஜாஸ்மின் (பிரியா லால்) கதாபாத்திரத்தின் எண்ட்ரிக்கு பிறகு வேறு ரூட் எடுத்து சினிமாத்தனமாக மாறிவிடுகிறது. அதேபோல ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் பரிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக நிறைய நியாயம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸில் குழந்தை பாட்டுடன் படத்தை முடிக்கும் தனது சென்டிமெண்ட்டை, இந்த படத்திலும் வைத்திருக்கிறார் சுசீந்திரன். அது நன்றாகவே வேலை செய்கிறது.

      கொஞ்ச நேரமே வந்தாலும், தனது சாந்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் ஹீரோயின் பிரியா லால். ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மீரா கிருஷ்ணன் என படத்தில் நடித்த அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து ஆகியோரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

      சிலு சிலு பாடலில் குழந்தையின் மனதை திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். ஆனால் ஒரு சில இடங்களில் தேவையில்லாத இந்த ஹெலிகேம் ஷாட்டுகளை தவிர்த்திருக்கலாம். ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் படத்தை நறுக் என தந்ததற்காகவே எடிட்டர் தியாகுவிற்கு தனி பாராட்டுக்கள்.

      சமுதாயத்திற்குத் தேவையான கருத்தை சரியான நேரத்தில் படமாகத் தந்ததற்காக இந்த ஜீனியஸை பாராட்டலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என நாம் செய்யும் அனைத்துமே நிச்சயம் நல்ல பலனைத் தான் தருமா, என ஒவ்வொரு பெற்றோரும் ஒருமுறைக்கு பலமுறை சிந்திக்க உதவுகிறது இந்தப் படம்.