Tamil»Movies»Kaatrin Mozhi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பதினொரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி. மொழியில் இருந்த அதே மேஜிக் இதிலும் இருக்கிறது. வித்யா பாலன் நடித்து இந்தியில் வெளியான துமாரி சுலு படத்தின் ரீமேக் தான் என்றாலும், ஒரிஜினலைவிட மிக அற்புதமாக படத்தை தந்திருக்கிறார் ராதாமோகன்.

      முதல்பாதியும் சரி, இரண்டாம் பாதியும் சரி, படம் எப்படி நகர்கிறது என்பதே தெரியவில்லை. விதவிதமான மனிதர்கள், எஃப்.எம். ஸ்டேஷன் என சுவாரஸ்ய திரைக்கதையில் பார்வையாளர்களை கட்டி இழுத்து செல்கிறார் இயக்குனர். ஒரு ஆர்.ஜேவாக தனது காலர்களை ஜோதிகா கையாளும் விதம் படு சுவாரஸ்யம். ரயில் ஓட்டுனர், உள்ளாடை விற்பனையாளர், மனைவியை இழந்த கணவர் என ஒவ்வொரு காலரும் ஒரு புதிய உணர்வையும், கோணத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.

      ஹீரோயினை சுற்றியே நடக்கும் கதையில் நாயகனாக விதார்த். பெரிய வேலை இருக்காது என்று தெரிந்தும் துணிந்து இந்த கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு, கிடைத்த கேப்பில் செமையாக ஸ்கேர் செய்திருக்கிறார். ஜோதிகாவிடம் போனில் பேசும் அந்த காட்சியில் ஒரு கணவனின் வலியை யதார்த்தமாக உணர்த்திவிடுகிறார்.

      இவர்களை தாண்டி ராதாமோகன் டீமில் புதிதாக இணைந்திருக்கும் லட்சுமி மஞ்சு தான் படத்தின் க்யூட் சர்ப்ரைஸ். ஒரு எஃப்.எம். ஸ்டேஷனை நிர்வகிக்கும் அதிகாரியாக கம்பீரமாக நடித்து கலக்கி இருக்கிறார்.

      ஒரு சீனில் வந்தாலும் கலகலப்பு ஏற்படுத்துகிறார் சிம்பு. யோகிபாபுக்கு படத்தில் இரண்டு சீன் தான். மனுஷன் ரொம்ப பிஸிங்கிறதால அவர் வீட்டு மொட்டை மாடியிலேயே ஷூட் பண்ணிருப்பாங்க போல. தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ்ன்னு இஷ்டத்துக்கு அளந்துவிடுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும், கிச்சிகிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார் மயில்சாமி.

      படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பொன்.பார்த்திபனின் வசனங்கள். அலுப்படைய செய்யாமல் படத்தை அவ்வளவு யதார்த்தமாக கொண்டு செல்கின்றன. இதற்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்.

      மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் படத்தில் வரும் அத்தனை பேருமே அழகாக தெரிகிறார்கள். ஒரு எஃப்.எம். ஸ்டேஷனை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் கலை இயக்குனர் கே.கதிர். படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் எடிட்டர் பிரவீன் கே.எல்.

      படம் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது, மலை பிரதேசக்கு சுற்றுலா சென்று திரும்பிய உணர்வு ஏற்படுகிறது. பாசிட்டிவ் எனர்ஜியை தந்தமைக்காகவே படக்குழுவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.