twitter
    Tamil»Movies»Kabali»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இல்லாமல் ஒரு நல்ல படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது கபாலி. படத்தின் கதையும், ரஞ்சித் அதை படமாக்கியுள்ள விதமும் பாராட்ட வைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியை நடிக்க வைத்துள்ளார் ரஞ்சித்.

      தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். அதற்காக அவருக்கு ஒரு "சூப்பர்டா" என்று பாராட்டைக் கொடுத்தே ஆக வேண்டும்.

      ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள கபாலி தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களில் ஒன்றாக நிச்சயம் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ கபாலி குறித்த ஒரு மின்னல் விமர்சனம்..

      இந்தப் படத்தில் தலித் இனத்தவரின் தலைவராக ரஜினி வருகிறார் என்பதுதான் இதில் மிகப் பெரிய ஹைலைட். படத்திலும் அதற்கேற்ப வசனங்களை செம போல்டாக வைத்துள்ளார் ரஞ்சித். அந்தத் துணிச்சலுக்காகவே அவருக்கு பெரிய சபாஷ் போட வேண்டும். ஒரு சின்ன உதாரணம் - காந்தி சட்டையைக் கழற்றியதிலும், அம்பேத்கர் கோட் போட்டதிலும் அரசியல் இருக்கு என்பார் ஒரு காட்சியில் ரஜினி.

      ரஜினிகாந்த் வழக்கம் போல பிரித்து எடுத்திருக்கிறார் - ஸ்டைலி்ல் அல்ல, நடிப்பில். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ரஜினியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இது வழக்கமான ரஜினி படமாக இல்லாமல் இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.

      ரஜினி என்றால் ஸ்டைல் என்பதை மாற்றி அவர் ஒரு நல்ல நடிகரும் கூட என்பதை மீண்டும் நிரூபிக்க வைத்துள்ளார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார் ரஜினி. ரஜினி ரசிகர்களுக்கு இதில் லேசான ஏமாற்றம் இருக்கலாம். ஆனால் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இது மாறியுள்ளது. ரஜினி அடி வாங்கும் காட்சி இதுவரை எந்தப் படத்திலும் இப்படி படமாக்கப்பட்டதில்லை என்பது சுவாரஸ்யமான தகவல்.

      ராதிகா ஆப்தே.. ரித்விகா.. வாவ் என்று சாதாரணமாக இவர்களது நடிப்பைச் சொல்லி விட முடியாது. செமத்தியான நடிப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் இருவரும். ரஜினி படத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள ரஞ்சித்தை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

      படத்தில் நடித்துள்ள அத்தனை பேருமே, தன்ஷிகா, ஜான் விஜய் என அனைவருமே நடிப்பில் அசத்தியுள்ளனர். குறிப்பாக ரஜினியும், வின்ஸ்டன் சாவோவுக்கும் இடையிலான அந்த உரையாடல் பிரமாதமாக வந்துள்ளது. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது வசனங்கள்தான். செம போல்டாக வசனத்தைத் தீட்டியுள்ளனர்.

      தைவானைச் சேர்ந்த வின்ஸ்டனுக்கு இந்த முதல் தமிழ்ப் படமே அட்டகாசமாக அமைந்துள்ளது. எடிட்டர் பிரவீன் பணி அமர்க்களமாக உள்ளது. படத்தின் கட்டுக்கோப்பை இவர் கலையாமல் அப்படியே கொடுத்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாவது பாதியில்தான் உணர்ச்சிகரம் அதிகமாக உள்ளது. சண்டைக் காட்சிகள் எதார்த்தமாக வந்துள்ளன. தேவையில்லாத சண்டைகளைத் தவிர்த்துள்ளதைப் பாராட்டலாம்.

      படத்திற்கு இன்னொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன். ஒரு ரஜினி படத்திற்கான இசையாக இல்லாமல் கபாலி கதைக்கேற்ற இசையைக் கொடுத்துள்ளார் சந்தோஷ்.

      ரஜினி ரசிகர்களுக்கு - இது நிச்சயம் ரஜினி படம் அல்ல. இது வேற லெவல் படம். அதேசமயம் ஒரு நல்ல சினிமா பார்க்க விரும்புபவர்களுக்கு இது ஆச்சரியப் படம்.