twitter
    Tamil»Movies»Kaththi Sandai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நீண்ட நாளைக்குப் பிறகு வடிவேலு மீண்டும் காமெடி வேடம் கட்டத் தொடங்கிவிட்டார் என்ற தகவலே கத்தி சண்டை படம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டது. அவருக்காக நாய் சேகர், என்கவுண்டர் ஏகாம்பரம் போன்ற மறக்க முடியாத கேரக்டர்களை உருவாக்கி சுராஜ் இயக்கியுள்ள படம் என்பதால் எதிர்ப்பார்ப்புடன் நம்பிக்கையும் சேர்ந்து கொண்டது.

      இவற்றை பூர்த்தி செய்கிறதா கத்தி சண்டை?

      முதல் பாதி சூரிக்கு, இரண்டாம் பாதி வடிவேலுவின் ரீ என்ட்ரிக்கு என பாகப் பிரிவினை செய்திருக்கிறார் சுராஜ். மாமல்லபுரத்தில் பூர்வஜென்ம கவிதைகளைக் காட்டும் காட்சிகளில் மட்டும் சூரி & கோ சிரிப்பை வரவழைக்கிறது.

      இடைவேளைக்கு முன் வரும் அந்த திடீர் திருப்பம் நச். ஆனால் அந்த விறுவிறுப்பும் வேகமும் இரண்டாம் பாதியில் இல்லை. படம் முடியும் தருணத்தில் வரும் அந்த ப்ளாஷ்பேக் காட்சியை இன்னும் அழுத்தமாக, சுவாரஸ்யமாக உருவாக்கியிருக்கலாம்.

      படத்தில் பாராட்டத்தக்க இரு விஷயங்கள் ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும்.

      ஜெகபதி பாபுவுக்கு அத்தனை பிரமாதமான ஆக்ஷன் ஓபனிங்கை கொடுத்தவர்கள், கடைசியில் அவரையும் காமெடியனாக்கி விடுகிறார்கள். இன்னொரு வில்லனாக வரும் தருண் அரோரா தோற்றத்தில் அசத்துகிறார். ஆனால் பெரிதாக அவருக்கும் வேலையில்லை.

      ஹிப் ஹாப் தமிழாவுக்கு எல்லா பாடல்களையும் தானே பாட வேண்டுமென்ற பேராசை இருக்கலாம். ஆனால் அதைச் சகிக்கும் சக்தி ரசிகர்களுக்கு வேண்டுமே. பின்னணி இசை ஓகே!

      மிகத் திறமையான நடிகர்கள், டெக்னீஷியன்கள், வசதியான பட்ஜெட் எல்லாம் இருந்தும், சுவாரஸ்யமான திரைக்கதை, குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளை அமைக்கத் தவறியிருக்கிறார் சுராஜ்.