Tamil»Movies»Madhura Veeran»Critics Review

  விமர்சகர்கள் கருத்து

  • சண்முக பாண்டியன் அறிமுகமான 'சகாப்தம்' படத்தை விட இதில் எவ்வளவோ தேறியிருக்கிறார். சண்டைக் காட்சி தவிர மற்ற எல்லாக் காட்சிகளிலும் ஒரே ரியாக்‌ஷன் கொடுப்பது தான் தாங்கமுடியவில்லை. கேமரா பயம் இன்னும் ஒருசில படங்களில் விலகிவிடும் என்றாலும் அதுவரை நாம் பார்த்துச் சகிக்கவேண்டும் இல்லையா? ஹீரோயின் மீனாட்சி அப்படியே கிராமத்துப் பெண் வேடத்துக்கு பக்காவாக பொருந்திப் போகிறார். வெட்கமும், சிரிப்பும், நையாண்டியுமாக மதுரைப் பின்னணி கொண்ட படத்துக்கேற்ப செம செலக்‌ஷன். சமுத்திரக்கனி ஊர் மக்களுக்காக நல்லது செய்வது, வழியில் பார்ப்பவர்களுக்கு அட்வைஸ் செய்வது, கெத்தாக நடந்து செல்வது என அவர் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவர் விட்ட பாதயாத்திரையை அவர் மகன் சண்முகபாண்டியன் படம் முழுக்க நடந்து நிறைவேற்றி வைக்கிறார்.

   பங்காளி, மாமன், மச்சான் என மாரிமுத்து, தேனப்பன், வேல.ராமமூர்த்தி ஆகியோர் மதுரை கதைக்கேற்ற நடிகர்கள். சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் செந்திகுமாரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடிக்கு பாலசரவணன் டயலாக் மற்றும் மாடுலேஷனால் சிரிக்கவைக்கிறார். அட்ரஸ் மாறி வந்து சண்முகபாண்டியனின் ஊரிலேயே டென்ட் போடும் கேரக்டர் ஒன்று டைமிங் என்ற பெயரில் போடும் மொக்கைகள் கொஞ்சம் வெறித்தனம். மொட்டை ராஜேந்திரன் மலேசியா கான்செப்ட் வைத்து 'கபாலி' படத்தை ஸ்பூப் செய்திருக்கிறார். 'கபாலி'யில் கெத்தாக ரஜினி சொன்ன டயலாக் கேட்கும்போதெல்லாம் இனி மொட்டை ராஜேந்திரன் நினைவு வருமென நினைக்கும்போதுதான் சற்றே டரியலாகிறது.

   படத்தின் பெரும் பலம் ஒளிப்பதிவு. இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிற ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா மதுரையின் அழகியலை மண்மணம் மாறாமல் பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை மிரட்டல். 'என்ன நடக்குது நாட்டுல...' பாடல் புல்லரிப்பு வகையறா என்றால் 'உன் நெஞ்சுக்குள்ளே' மெலடி வருடல். ஜல்லிக்கட்டு தொடர்பான கதை தொடங்கியதும், கடந்த கால ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான காட்சிகள் தொகுப்பாக காட்டப்படுகின்றன. மெரினா போராட்டத்தின் எழுச்சியை ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.

   ஜல்லிக்கட்டு விளையாட்டில் தென் மாவட்டங்களில் நிலவி வருகிற சாதிய மோதல்களைத் துணிச்சலாகப் பேசியிருக்கிறது 'மதுரவீரன்' படம். நல்ல கதைக்களம், ரசிகர்களை எளிதில் ஈர்க்கிற மாதிரியான ட்ரெண்டி சப்ஜெக்ட் எனப் பிடித்திருந்தாலும், மலேசியாவில் இருந்து வந்த சண்முக பாண்டியன் தான் வந்த நோக்கத்தை அந்தலை சிந்தலையாக விட்டுவிட்டு ஜல்லிக்கட்டை நடத்தத் துடிப்பது, பிறகு, அப்பாவைக் கொன்றவனை கண்டுபிடித்த பின்பும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கே முன்னுரிமை கொடுப்பது என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தல். கடைசி கட்டங்களில் அடுத்து எதை வைப்பது என்பதில் தடுமாறியிருக்கிறது திரைக்கதை. சாதிய மோதல்களுக்கும், வன்முறைக்கும் எதிராக நிற்கும் சண்முக பாண்டியனே, "என் அப்பாவ கொன்னவன் யாருன்னு தெரிஞ்சும் கண்டந்துண்டமா வெட்டாம இருக்கேன்னா..." என வசனம் பேசுவது துருத்தல்.

   சாதிகளுக்குள் இருக்கும் சுயநல பிரிவினைவாதிகளால் ஏற்படுத்தப்படும் சாதிய மோதல்கள் துணிவாகக் கையாளப்பட்டிருக்கின்றன. எதிரும் புதிருமாய் முட்டிமோதிக்கொண்டிருந்த வேல.ராமமூர்த்தியே மைம் கோபியின் கைதூக்கி மேலேற உதவுவது சாதியற்ற சமூக விதைக்கான குறியீடு. ஆண்ட பரம்பரை, ஆளப்போற பரம்பரை என வரிந்துகட்டிக்கொண்டு சாதி வெறியில் திளைக்கும் இளைஞர்களையெல்லாம் 'பனானா' பவுன்ராஜ் வழியாக நையாண்டியாகவும், சண்முகபாண்டியன் வழியாக சீரியஸாகவும் விமர்சிக்கிறது படம். அதற்காகவே ஸ்பெஷல் பாராட்டுகள். சண்முக பாண்டியனுக்கு "பெட்டர் ட்ரை நெக்ஸ்ட் டைம்" சொல்லி, இயக்குநர் பி.ஜி.முத்தையாவுக்கு "மைல்ஸ் டு கோ" சொல்வோம்.