twitter
    Tamil»Movies»Marudhu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • குட்டிப் புலி, கொம்பன் ஆகிய இரண்டு படங்கள் எடுத்தார் முத்தையா. இரண்டுமே சாதிப் பெருமை பேசுவதாய் அன்றைக்கு குற்றச்சாட்டுகள். இத்தனைக்கும் அவை இலைமறைக்காயாகத்தான் சாதிக் குறியீடுகள் இருந்தன. ஆனால் இந்த மருது படமோ நேரடியாகவே சாதிப் பெருமை பேசுகிறது, பெரும்பாலான காட்சிகளில். ஆனால் சின்ன முணுமுணுப்பு கூட இல்லை!

      கதையிலோ கதை மாந்தர்களிலோ தனது முந்தைய இரு படங்களிலிருந்தும் எந்த வகையில் வேறுபடாமல் பார்த்துக் கொண்டுள்ளார் முத்தையா.

      அதே கிராமம் சார்ந்த நகரம். அதே சென்டிமென்ட் (குட்டிப் புலியில் அம்மா, கொம்பனில் மாமனார், இதில் அப்பத்தா), அதே ரத்தக்களறி, சண்டியர்த்தன சண்டைகள்.

      தவறைத் தட்டிக் கேட்கும் பெண்ணாக வரும் ஸ்ரீதிவ்யா, விஷால் தன் உயிரைக் காப்பாற்றிய அடுத்த காட்சியில் டூயட் பாடிவிட்டு குடும்பப் பாங்கினியாகி விடுகிறார்.

      விஷாலின் முறுக்கேறிய உடம்புக்கு ஏற்ற வேடம். நன்றாகவே நடிக்கிறார்... இல்லை.. அடிக்கிறார். அவரது ஒவ்வொரு அடிக்கும் பூமி பஞ்சராகிறது. ஆனால் பச்சையாகவே சாதிப் பெருமையைப் பேசும் காட்சிகளில் அவர் தோன்றும்போது பார்க்கும் நமக்கே கூசுகிறது. இவருக்கு எப்படியோ?

      சூரிக்கு வழக்கமான நண்பன் வேடம்தான் என்றாலும், கோமாளித்தனமாக இல்லாமல் நெகிழ வைக்கும்படியான காட்சிகள். சிரிக்கவும் வைக்கிறார்.. மனசிலும் ஒட்டுகிறார்.

      சினிமா என்பது பொழுதுபோக்கு. அதை மீறி ஏதாவது கருத்து சொல்வதாக இருந்தால் சொல்லிவிட்டுப் போங்கள். ஆனால் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் எந்த சாதி வெறியை, வன்முறையை துறக்க வேண்டும், மறைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்களோ, அதை தூக்கிப் பிடிக்கும் போக்கை எப்போது நிறுத்துவீர்கள் முத்தையா?