twitter

    விமர்சகர்கள் கருத்து

    • விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடையே இருக்கும் செமத்தியான வரவேற்பை தியேட்டர்களில் உணரமுடிகிறது. அவரது வழக்கமான நடை, எகத்தாளமான லுக், அல்டிமேட் ரியாக்‌ஷன்ஸ் என எல்லாவற்றிற்கும் ரசிகர்கள் குலுங்கிச் சிரிக்கிறார்கள். விஜய் சேதுபதியின் ஒன் லைனர்ஸுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. ஒன் லைனர்களுக்கே ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி மூச்சு விடாமல் பேசும் காட்சி வந்தால் கேட்கவா வேண்டும்? விசில் தெறிக்கிறது. நடிக்கிறோம் என்கிற மைண்ட்செட்டே இல்லாத விஜய் சேதுபதியின் அந்தப் பார்வைகளுக்காகத்தான் அத்தனை ஆரவாரமும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படத்தில் குறையில்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி.

      கௌதம் கார்த்திக்குக்கு இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோல். ஹீரோ, வில்லன் என்கிற மாதிரி இல்லாமல் லைட்டான காமெடியன் ரோல். ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போதே நல்ல கேரக்டருக்காக செகண்ட் ஹீரோ அளவுக்கு இறங்கி நடித்ததற்காகவே பாராட்டலாம். பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவருடன் கூடவே வரும் நண்பராக டேனியல். 'ஃப்ரெண்டு லவ் மேட்ரு... ஃபீலாகிட்டாப்ள' என டயலாக் பேசியவரை குமுறக் குமுற அடித்து நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள். கௌதம் கார்த்திக்கும், டேனியலும் இந்தப் படத்தில் அடிவாங்காத ஏரியாவே இல்லை எனச் சொல்லலாம். அடி வாங்கிவிட்டு எல்லாக் காட்சிகளிலும் கூலிங் கிளாஸை தேடி எடுத்து அணியும் கௌதம் கார்த்திக்கின் நடிப்பு இந்தப் படத்தில் முன்னேற்றம்.

      விஜய் சேதுபதியின் நண்பர்கள் ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சீரியஸாக முகத்தை வைத்தே சிரிப்பு மூட்டும் ரமேஷ் திலக், அப்பாவியாக எதையாவது சொல்லியே அடிவாங்கும் ராஜ்குமார் என விஜய் சேதுபதி கைக்குத் துணையாக கலக்கல் காம்போ. விஜய் சேதுபதியின் அம்மாவாக விஜி சந்திரசேகர் மிரட்ட முயற்சிக்கிறார். எம குலத்தைச் சேர்ந்தவராக இன்னொரு நாயகி காயத்ரி. விஜய் சேதுபதியை ஒருதலையாகக் காதலிப்பதும், தனக்குப் போட்டியாக இன்னொருத்தி வந்துவிட்டதால் கடுகடுப்பதும், நிஹாரிகாவுக்கு உதவி தனது இருப்பை உறுதி செய்துகொள்ளவும் துடிக்கிற காட்சிகளில் சிறப்பு. அறிமுக நடிகை நிஹாரிகா குறையில்லாமல் ஓரளவுக்கு நன்றாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார்.

      மனிதர்களிலேயே எமகுலம் என்கிற வித்தியாசமான கான்செப்ட், 'உண்மையா உழைச்சு திருடணும்" என்கிற பிரமாதமான கொள்கை, ஆண்கள் தாலி அணிந்துகொள்கிற வழக்கம் என படம் முழுக்க வித்தியாசம். வித்தியாசமான கதையை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நகைச்சுவைக் காட்சிகளோடு ஒரு நல்ல முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார். விஜய் சேதுபதி நிஹாரிகாவை கடத்தியதற்கான காரணம் வெளிப்பட்ட இடம் அதிர்ச்சிக்குரியதாக இல்லாதது குறை. பெரிதாக எதிர்பார்க்க வைத்து பெரிய ட்விஸ்ட் இல்லாமல் படத்தை எடுத்திருந்தாலும், பொழுதுபோக்குத் திரைப்படமாக ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது இந்தப் படம்.

      ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, படத்தின் கதைக்களத்திற்குத் தேவையானதைச் செய்திருக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், படம் பார்க்கும்போது துறுத்தாமல் இருக்கின்றன. காட்டுக்குள் இரவில் எடுத்த காட்சிகள், சென்னையில் வரும் கல்லூரி காட்சிகள் என ஒளிப்பதிவில் அத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் ஶ்ரீ சரவணன். காமெடிக்கு கௌதம் கார்த்திக், டேனியல், ரமேஷ் திலக், ராஜ்குமார் என எல்லோரும் போட்டி போட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு இடங்களைத் தவிர பல காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி. எமனாக விஜய் சேதுபதி எமகாதக நடிப்பு. ஆக்‌ஷன் பிளாக், அதிரடி திருப்பம் என திரில் காட்டாமல் காமெடியால் திருப்திப் படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர். 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றோம்' - நம்பிப் போகலாம்!