twitter
    Tamil»Movies»Pariyerum Perumal»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தின் முதல் காட்சியே நெஞ்சை உறைய வைக்கிறது. ஓடுக்கப்பட்ட மக்களின் வலியை கருப்பியின் (வேட்டை நாய்) கொடூரக் கொலையை வைத்தே பார்கையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர். கல்லூரிக்கு சென்று உயர் கல்வி கற்க நினைக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆதிக்க சாதி மாணவர்களால் என்ன பாடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

      ஆனந்தியின் குடும்பத்தினர் கதிர் மீது சிறுநீர் கழிக்கும் காட்சியும்... கதிரின் தந்தைக்கு நேரும் கொடுமையும்.... நம் ஈறக்குலையை நடுங்கச் செய்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு கொடுமைகளையும் தாங்கினால் தான் இந்த மாணவனால் படிப்பை தொடர முடியும் என காட்டியிருப்பதும் சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு.

      "நாங்க நாயாக இருக்கனும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்க எதுவும் மாறாது", "ரூம்ல போய் தூக்கு மாட்டிக்கிட்டு சாகுரதவிட, சண்ட போட்டு சாகலாம்", போன்ற நச் வசனங்கள் சாதிவெறிக்கு எதிரான சாட்டையடி. இந்த படத்தை மாரி செல்வராஜ் கையாண்டிருக்கும் விதம், மிகவும் பாராட்டத்தக்கது. சாதி என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

      பரியேறும் பெருமாளாகவே வாழ்ந்திருக்கிறார் கதிர். பரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல ஒரு கோடு என சட்டக்கல்லூரிக்குள் கம்பீரமாக நுழைந்து, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, திமிறி எழந்து, திருப்பி அடித்து என மிரட்டியிருக்கிறார். காடு மேடுகளில் ஓடி, வெயிலில் காய்ந்து, அடி வாங்கி, உதை வாங்கி, உருண்டு, புரண்டு உயிரை துச்சமென கருதி நடித்திருக்கிறார் கதிர். தமிழ் சினிமாவில் மற்றொரு சிறந்த நடிகன் நான் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார். சபாஷ் கதிர்.

      இவ்வளவு சீரியசான படத்தின் மிகப்பெரிய ரிலாக்சேஷன் யோகி பாபு. சும்மா காமெடியனாக மட்டும் இல்லாமல், மிக அழுத்தமான கதாபாத்திரம். நெல்லை பாஷை வாயில் நுழையவில்லை என்றாலும், ரசிக்கும்படியாக செய்திருக்கிறார். அதுவும் அந்த சின்ன சியா பெரிய சியா காமெடிக்கு திரையரங்கில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகிறது.

      சாதித்திமிர் பிடித்த மாணவனாக வரும் லிஜிஷ் மிகவும் பொருத்தமான தேர்வு. சிறப்பாக செய்திருக்கிறார். ஆனந்தியின் அப்பாவாக வரும் மாரிமுத்து, ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் கலக்கிவிட்டு போகும் சண்முகராஜா, ஆசிரியர்கள், ஊர்காரர்கள், குடும்ப உறவினர்கள் என அனைவருமே சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

      கருப்பியை ஒரு துணை பொருளாக இல்லாமல், மனிதத்தை சிதைக்கும் மிருகங்களின் கொடூரத்தை உணர்த்துவதற்காக பயன்படுத்தி இருப்பது அருமை. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பல கதைகள் சொல்கின்றன. சீரழிந்துவிட்ட மனிதத்தை தட்டி எழுப்ப செய்கின்றன.

      குறைகளை தேடி ஆராய்ந்து எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் பரியேறும் பெருமாளுக்கு எழவில்லை. இன்றைய சூழலில் மிக அவசியமான பதிவு இந்த பெரியேறும் பெருமாள். சாதியும் மதமும் மனித இனத்திற்கே எதிரானது என அழுத்தம், திருத்தமாக சொன்னவிதத்தை மனதாரப் பாராட்டுகிறோம்.