twitter
    Tamil»Movies»Ratsasan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையே ராட்சசன் திரைப்படம்.

      பொதுவாக சைக்கோ திரில்லர் படங்களுக்கு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த ராட்சசனும் அதே டெம்ப்ளேட்டில் தான் நகர்கிறான். ஆனால் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் வித்தியாசப்படுகிறார் இயக்குனர் ராம்குமார். முண்டாசுப்பட்டி எடுத்த இயக்குனரா இந்த படத்தை எடுத்தார் என வியக்க வைத்திருக்கிறார்.

      முதல் பாதி முழுவதுமே படம் செம திரில்லிங்காக நகர்கிறது. ராட்சசனின் கொலைகள் நம்மை நடுங்க செய்கிறது. யார் இந்த ராட்சசன் என எளிதில் யூகித்துவிட முடியாத அளவுக்கு மிக அற்புதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். இப்படத்திற்காக அவர் செய்துள்ள ஆய்வுகள் படம் பார்க்கும் போது தெரிகிறது.

      இரண்டாம் பாதியின் பெரும்பகுதி வரை ராட்சசனை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுவது அயர்வை ஏற்படுத்தி விடுகிறது. ராட்சனை திரையில் காட்டிய பிறகும், படத்தை நீட்டிக்கொண்டே போவது, தேவையில்லாதது.

      ஜிப்ரானின் பின்னணி இசை நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. கொலைக்காட்சிகளுக்கு அவர் அமைத்திருக்கும் இசை, மனதை பதைபதைக்கச் செய்கிறது. 'காதல் கடல் தானா' பாடல் ஹைக்கூ. மற்ற பாடல்களும் காதுக்கு இனிமை. ராட்சசனின் தீம் மியூசிக் செம திரில்லிங்.

      இந்த கேரக்டருக்கு ஏன் அமலாபால் என தெரியவில்லை. பெரிய வேலையில்லை என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டன் சாரியில் ஸ்கூல் டீச்சராக வந்திருப்பது கண்களுக்கு குளிர்ச்சி. கிளாமரைவிட இது தான் உங்களுக்கு செட்டாகிறது அமலா.

      படத்தின் இரண்டு சர்ப்ரைஸ் நடிகர்கள் முனிஸ்காந்த் ராமதாசும், மைனா சூசனும். இருவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். வினோதினியை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.

      குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் இந்த ராட்சசனிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கொடூரக் கொலைகள் செய்யும் இந்த ராட்சசனை தைரியம் இருப்பவர்கள், த்ரில்லர் விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்.