twitter
    Tamil»Movies»U Turn»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த யுடர்ன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். கன்னட யுடர்னை பார்க்காதவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் திரில்லர். முதல் பாதி முழுவதும் படத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பவன்குமார். இரண்டாம் பாதியை புதிய கோணத்தில் கையாண்டிருக்கும் விதமும், தமிழ் சினிமாவுக்கு புது அனுபவம்.

      ஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். வழக்கமாக நம் சினிமாக்களில் வரும் கிளிஷே பேய்களில் இருந்து விடுபட்டு, சாதாரண மனிதர்களை போலவே பேய்களையும் காட்டியிருப்பது வித்தியாச உணர்வை தருகிறது. பத்திரிகையாளர், போலீஸ் அதிகாரிகள், சாலை விதிகளை மீறுபவர்கள், மரணங்கள், அழகான குடும்பம் என பாத்திரப் படைப்பும் சம்பவங்களும் கச்சிதம்.

      ஏற்கனவே பார்த்து பழகிய அதே போலீஸ் அதிகாரியாக ஆதி. ஈரம் படத்தில் செய்ததை தான் இதிலும் செய்திருக்கிறார். ஆனால் முன்பைவிட முதிர்ச்சியான நடிப்பு. ஒரு போலீஸ் அதிகாரியாக தனக்காக எல்லையை கடக்காமல் பயணித்திருக்கிறார்.

      படத்தின் மிகப்பெரிய பலம் நாயகி சமந்தாவும், திரைக்கதையும் தான். ஆனால் ஒரு சில இடங்களில் இதுவே படத்தின் பலவீனமாகவும் மாறிவிடுகிறது. இளநிலை பயிற்சி நிபருர் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஓவர் மெச்சூர்டாக தெரிகிறார்.

      அதேபோல், ஒரு பெரிய ஆங்கில பத்திரிகையில் க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்கும் ராகுல் ரவீந்திரனுக்கு ஒரு முக்கியமான காவல் நிலையத்தில் நடைபெறும் அதிர்ச்சியான சம்பவங்கள் எதுவுமே தெரியாமலா இருக்கும். அப்படி தெரியவில்லை என்றால் அவர் எப்படி க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்க முடியும் இயக்குனரே.

      சாலை விதிமீறல்கள் என்பது தினமும் சர்வ சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒன்று தான். ஆனால் அதற்கான பின் வினைகள் இப்படி எல்லாம் கூட இருக்குமா என ஆச்சரியப்பட வைக்கிறது யுடர்ன். நாமும் சாலை விதிகளை மீறாமல் தியேட்டருக்கு யுடர்ன் எடுக்கலாம்.