twitter
    Tamil»Movies»Velaikkaran»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கிராமத்து கதையோ.. சிட்டி சப்ஜெக்டோ.. ஹீரோயினோடு காதல், பிரிவு, கொஞ்சம் சென்டிமென்ட், நான்கு பாடல்கள், அதில் ஒன்று காதல் தோல்விப் பாடல் என வழக்கமான ரூட்டில் பயணிக்காமல் இந்த முறை கொஞ்சம் இறங்கி அடித்திருக்கிறார் சிவா. சிவகார்த்திகேயன் பேசுவதை ரசிகர்கள் தம்மில் ஒருவர் பேசுவதாகத்தான் பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போலவே வசனங்களையும் நான்கு அடியாட்களைத் தெறிக்கவிட்டு அவர்கள் மேல் ஒற்றைக் காலை வைத்து மாஸாக பேசுவது போல அல்லாமல், சாதாரண நபராகவே பேசுகிறார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

      ஃபகத் பாசில் கார்ப்பரேட் முதலாளியாக ஸ்மார்ட் நடிப்பு. எம்.என்.சி கம்பெனிக்கான பெர்ஃபெக்ட் ட்ரெஸ் கோடில் மலையாள ஃபகத் அத்தனை கச்சிதம். கார்ப்பரேட்டுகள் உடலால் செய்யும் வேலைகளை விட மூளையால் செய்வதே அதிகம் என உணர்த்தும் ஸ்மார்ட் வொர்க்கை படத்திலும் கையாண்டிருக்கிறார். அதிர்ச்சி, கோபம், சிரிப்பு அத்தனையும் மெல்லியதாக இருந்தாலும், அவரது கேரக்டருக்கு செமையாக செட் ஆகிறது. இந்தப் படத்திற்கு அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். மலையாள வாடை இல்லாமல் சுத்தமான கார்ப்பரேட் லாங்வேஜ் அசத்தல். இந்தப் படத்தில் மினி கோடம்பாக்கமே நடித்திருக்கிறது. நடிகர்கள் லிஸ்ட்டே ஒரு பத்தி வரும் அளவுக்கு நிறைய தெரிந்த முகங்கள். அத்தனை பேரும் குறைசொல்லமுடியாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

      நடுத்தர வர்க்கத்தினரிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி நுழைகின்றன, தங்களை நோக்கி மக்களை எளிதில் எவ்வாறு ஈர்க்கின்றன என டீட்டெயிலாகவே சொல்லியிருக்கிறார்கள் படத்தில். மக்களுக்கு உற்பத்தி பொருளின் மீது ஆசையைத் தூண்டுவதற்கான மார்க்கெட்டிங் டேக்டிக்ஸ், நுகர்வு கலாச்சாரம் பெருகியதற்கான சைக்காலஜிக்கல் ஸ்ட்ராடஜி என ஒரு மேலாண்மைப் பாடமே நடத்தியிருக்கிறார் மோகன் ராஜா. கமர்ஷியல் ஆடியன்ஸ் பெற்றுள்ள நடிகரின் படத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுவது பலருக்கும் சென்றடையும் என்கிற விதத்தில் இதை சமூக நோக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

      செட் காட்சிகள் என நம்பமுடியாத அளவுக்கு ரியலாகவே குப்பத்து பகுதிகளை உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ். நெருக்கமான வீடுகள், மரங்கள், பூசப்படாத சுவர்கள் என குப்பத்து பகுதி மக்களின் வாழ்வியலை நேர்த்தியாகக் காட்டியிருந்தது செட். அந்தப் பகுதிகளை தத்ரூபமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. எடிட்டிங்கில் சிறப்பாக உழைத்திருக்கிறார் ரூபன். கலை இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும் அவ்வளவு உழைத்த படக்குழு திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது

      பின்னணி இசை, பாடல்களில் இசையமைப்பாளர் அனிருத் கலக்கியிருக்கிறார். 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் ஆடியோ வெளிவந்தபோதே வெறித்தன ஹிட் அடித்தது எல்லோருக்கும் தெரியும். தியேட்டரிலும் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் விசில் பறக்கிறது. 'எழு வேலைக்காரா' பாடல் படத்தின் இறுதியில் வருகிறது. படம் முடியும்போது இருக்கையை விட்டு எழுந்தவர்களையும், நிற்கவைத்திருக்கிறது அனிருத்தின் அதிரடி இசை.

      மேக்கிங்கில் நன்கு மெனக்கெட்ட படக்குழுவினர் திரைக்கதையை இன்னும் வலுவாக்கி த்ரில்லாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அதிகம் தொய்வில்லாத காட்சிகளின் மூலம் ஈர்த்திருக்கிறார் மோகன் ராஜா. ஹீரோயின் நயன்தாராவுக்கும் படத்தில் அதிக ஸ்கோப் இல்லை. சிவா - நயன்தாரா ரொமான்ஸ் காட்சிகள், காதல் காட்சிகள் வேகத்தைக் குறைக்கும் எனத் தவிர்த்திருக்கலாம். "விசுவாசம் என்பது முதலாளிக்கு விசுவாசமாக இருப்பது அல்ல... வேலைக்கு விசுவாசமாக இருப்பது" என்பது போல ஆங்காங்கே சூப்பபரான வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மக்களுக்குத் தேவையான நல்ல சமூகக் கருத்தை நேர்மையாகச் சொல்லி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வென்றிருக்கிறான் இந்த 'வேலைக்காரன்'!