7 ஆண்டுகளுக்குப்பிறகு பாட்டுப்பாடும் நகுல்.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை : இளம் நடிகராக இருந்து வரும் நகுல் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பாடகராகவும் உள்ளார்.
சமீப காலமாகவே இவர் நடித்த திரைப்படங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து சரிவர வெளியாகாமல் இருக்கின்ற நிலையில் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தார்.
சிறந்த கதை அம்சத்தை கொண்டு வரும் பட வாய்ப்புகளில் நடித்து வந்த நகுல் பாடல்கள் மட்டும் பாடாமல் இருக்க இப்பொழுது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல் பாடுகிறார்.

ஹீரோ அவதாரம்
நடிகை தேவயானியின் சகோதரரும் நடிகருமான நகுல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். 5 இளைஞர்களை சுற்றி நடக்கும் பாய்ஸ் படத்தில் கொஞ்சம் குண்டாக வித்தியாசமான தலைமுடியுடன் காணப்பட்ட நகுல் அடுத்த திரைப்படத்திலேயே உடல் எடையை குறைத்து பலரும் அசந்து போகும் அளவிற்கு ஹீரோ அவதாரம் எடுத்தார்

எதுவும் வெளியாகவில்லை
நகுல் ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன் படம் சுமாரான வெற்றி மட்டுமே பெற்றிருந்தாலும் அதில் நகுலின் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்திருந்தது. இந்த படத்தில் வரும் நாக்க முக்க பாடல் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து அதைத்தொடர்ந்து கந்தக்கோட்டை, மாசிலாமணி,நான் ராஜாவாகப் போகிறேன்,வல்லினம்,தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், நாரதன் போன்ற தனித்துவமான படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த சில காலமாகவே படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் எதுவும் வெளியாகவில்லை.

சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்
இதற்கிடையில் பாடகராகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள நடிகர் நகுல் அந்நியன் படத்தில் காதல் யானை என்ற சூப்பர் ஹிட் பாடலைப் பாடி அனைவரையும் வியக்க வைத்ததோடு அதைத்தொடர்ந்து கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், கதை திரைக்கதை வசனம் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் தான் நடிக்கும் திரைப்படங்களிலும் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டிருக்க 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாடவில்லை.

புதியப் படத்தில்
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் நகுல் இப்பொழுது அறிமுக இயக்குனர் சதுஷன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ப்ரிஸ்லி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது, அஸ்வத் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்து மட்டுமே வந்த இவரை ரசிகர்கள் தொடர்ந்து பாடல்களையும் பாடும் படி கோரிக்கை வைத்திருந்தனர். ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் படத்தில் ஒரு பாடல் பாட உள்ளாராம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்க விரைவிலேயே துள்ளலான இசையில் நகுலின் இளமையான குரல் வளத்தில் சூப்பரான பாடல் வெளியாக இருப்பது பலரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











