அரண்மனை 3ல் இருந்து 2வது சிங்கிள் "ரசவாச்சியே" வெளியானது!
சென்னை : அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 என இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் இயக்குனர் சுந்தர் சி இப்பொழுது அரண்மனை மூன்றாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
காமெடி படங்களுக்கு பெயர் போன சுந்தர் சி சரி இப்பொழுது பேய் படங்களை இயக்கி அதிலும் வெற்றி கண்டு வருகிறார்.
ஆர்யா, ராஷி கண்ணா,ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடித்து இருக்க இதன் 2வது சிங்கிள் ட்ராக் "ரசவாச்சியே" தற்பொழுது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தன்னுடைய பார்முலாவில்
இயக்குனர் சுந்தர் சி ஆரம்பம் முதலே குடும்பத்துடன் கண்டுகளிக்க கூடிய காமெடி படங்களை இயக்கி தொடர்ந்து வெற்றிகளை குவித்தார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை என்ற பேய் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் முறையாக சுந்தர் சி தன்னுடைய பார்முலாவில் இருந்து சற்று விலகி ஹாரர் படத்தை இயக்கி இருக்க இதில் ஹன்சிகா மோத்வானி, வினய், சந்தானம், மனோபாலா,கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரர் ஒருபுறம் இருந்தாலும் சுந்தர் சியின் வழக்கமான காமெடிக்கு கொஞ்சம் கூட குறையே இல்லாமல் படம் முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்திருக்க தியேட்டரிலும் மக்கள் வெள்ளம் நிறைவோடு சக்கை போடு போட்டு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மூன்றாவது பாகத்தை
அரண்மனை முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வெற்றிபெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் கொடுத்த வெற்றி ஊக்கத்தின் காரணமாக இப்போது சுந்தர் சி மூன்றாவது பாகத்தையும் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ஆர்யா, ஹீரோவாக நடிக்க கதாநாயகிகளாக ஆண்ட்ரியா,ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர்.

பிரம்மாண்ட கிளைமாக்ஸ்
இப்படத்தைப் பற்றி பிரம்மிக்க வைக்கும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்க இதன் கிளைமாக்ஸ் காட்சி சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டது. பிரம்மாண்டமாக உருவான கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் அளவில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

இரண்டாவது சிங்கிள் "ரசவாச்சியே"
குஷ்பு மற்றும் சுந்தர் சி இணைந்து தயாரித்து வரும் அரண்மனை 3 லிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்க ஏற்கனவே முதல் சிங்கிள் ரடடபட்டா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்பொழுது இரண்டாவது சிங்கிள் "ரசவாச்சியே" லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. பாடகர் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியுள்ள இந்த "ரசவாச்சியே" பாடல் மனதை வருடும் மெலோடி பாடலாக வெளியாகி உள்ளது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் . இப்படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











