அரண்மனை 3 படத்தின் தாலாட்டுப் பாடல்... வீடியோ வெளியிட்ட படக்குழு!
சென்னை : சுந்தர் சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் அரண்மனை 3.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், ரசிகர்களை அதிகளவில் திரையரங்குகளில் வரவழைத்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்பான செங்காந்தளே வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அரண்மனை 3 படம்
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிவரும் படம் அரண்மனை 3. முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது பாகத்தை தனது அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்து இயக்கியுள்ளார் சுந்தர் சி.

வசூலை பெற்றுத்தந்த படம்
இந்தப் படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்ட நிலையில் படம் நல்ல வசூலை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா என எப்போதும் போல கலக்கல் நட்சத்திர பட்டாளம் இருந்தது.

சத்யா இசை
மிகவும் கலர்புல்லான பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருந்தது. சத்யா என்பவர் இசையில் செங்காந்தளே உள்ளிட்ட பாடல்கள் மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் படம் சிறப்பாக ஓடிவரும் நிலையில் நேற்றைய தினம் படத்தின் செங்காந்தளே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

செங்காந்தளே வீடியோ பாடல்
பாடல் வெளியிடப்பட்டு சில மணிநேரங்களிலேயே 23 லட்சம் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு தீயாக தோன்றி என்ற படத்தின் மற்றொரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான ஆன்ட்ரியா நடிப்பு
ஆன்ட்ரியாவின் நடிப்பு படத்தில் பரவலாக சிறந்த விமர்சனத்தை பெற்றுள்ளது. அவர் தாய்மை உணர்வையும் ஆக்ரோஷத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்காந்தளே என்ற இந்தப் பாடல் அவரது தாய்மை உணர்வை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

கலவையான விமர்சனம்
அரண்மனை 3 படம் முந்தைய பாகங்களை நினைவுப்படுத்துவதாக படம் குறித்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது மிகவும் சவாலான விஷயம் என்று பட வெளியீட்டுக்கு முன்னதாக சுந்தர் சியே குறிப்பிட்டிருந்தார். ஆயினும் இந்தப படத்தையும் அவர் வெற்றிப் படமாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











