அடுத்த பஞ்சாயத்து.. சந்தோஷ் நாராயணனை கழட்டி விடும் பா ரஞ்சித்.. இளையராஜாவுடன் கூட்டணி?
சென்னை: அட்டக்கத்தியில் ஆரம்பித்து சார்பட்டா பரம்பரை வரை நீண்ட நட்பில் திடீரென விரிசல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

அட்டக்கத்தியில் ஆரம்பம்
இயக்குநர் பா ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமானார். சந்தோஷ் நாராயணன் இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற "ஆடிப் போனா ஆவணி", "நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா" உள்ளிட்ட அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆக படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அனைத்து படங்களிலும்
சந்தோஷ் நாராயணன் இசையில் முதல் படமே வெற்றி அடைந்த நிலையில், தொடர்ந்து அவருடன் அனைத்து படங்களிலும் இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணி வைத்தார். மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என 5 படங்களின் இசை மற்றும் பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்தன.

நட்பில் விரிசல்
சினிமாவை தாண்டியும் இருவரும் ஒருவருக்கொருவர் இணை பிரியாத நல்ல நண்பர்களாக இத்தனை ஆண்டுகளாக பழகி வருகின்றனர். ஆனால், தற்போது அந்த நெருங்கிய நீண்ட கால நட்பில் விரிசல் வந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்து மோதல்
தனது படங்களிலும் அதில் வரும் பாடல்களிலும் ஆழமான அரசியல் கருத்துக்களை வைத்து படமாக்கி வருகிறார் பா ரஞ்சித். இதுவரை அவர் சொல்பேச்சை கேட்டு வந்த சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரையில் இடம்பெற்ற பாடல்களில் சில வரிகளை மாற்ற சொன்னதில் இருந்தே இருவருக்கும் இடையில் கருத்து மோதல் வெடித்தது என்று கூறுகின்றனர்.

அறிவு விஷயத்தில்
சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் உருவான என்ஜாய் எஞ்சாமி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், சர்வதேச இதழான ரோலிங் ஸ்டோனில் பாடகி தீ மற்றும் கனடா ராப் பாடகர் வின்சன்ட் டி பால் இருவரின் புகைப்படங்கள் மட்டுமே அட்டைப் படத்தில் இடம்பெற அதற்கும் முதல் ஆளாய் இயக்குநர் பா ரஞ்சித் எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தார். பின்னர், இந்த மாத அட்டைப் படத்தில் அறிவு இடம்பெறவே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

கூட்டணி முறிவு
இதுவரை இணைபிரியாமல் இருந்து வந்த கூட்டணியில் தற்போது திடீரென விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், இனிமேல் இருவரும் இணைந்து பணியாற்றுவது என்பதே பெரிய கேள்விக் குறி தான் என்றும் கோலிவுட்டில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்த படத்தில் இளையராஜா
மேலும், பா ரஞ்சித் தனது அடுத்த படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் முதன் முறையாக கூட்டணி வைக்கப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி நண்பர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என்றும் சினிமா நண்பர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











