வைரமுத்து மகன்களுடன் போட்டிக்கு தயாரான கங்கை அமரன்.. ’கோட்’ படத்தில் தரமான சம்பவம்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே, யுவன் சங்கர் ராஜா இசையில் 'விசில் போடு' மற்றும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி 'கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த முறை விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌத்ரி மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் கேமியோவாக சிவகார்த்திகேயன் நடித்து இருப்பதாகவும் ஏஐ மூலமாக விஜயகாந்த்தை கொண்டு வரவும் வெங்கட் பிரபு முயற்சி செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு: அஜித் குமாரை வைத்து மங்காத்தா படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற வெங்கட் பிரபு சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அடுத்ததாக தற்போது விஜய்யை வைத்து மிரட்டலான படமாக கோட் படத்தை உருவாக்கி வருகிறார். கோட் படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட நிலையில், அதன் சிஜி காட்சிகள் லாஸ் வீகாஸில் நடைபெற்று வருகிறது.
விஜய் குரலில் 2 பாடல்கள்: புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா கோட் படத்தில் பணியாற்றியுள்ளார். ஏற்கனவே மதன் கார்க்கி வரிகளில் விஜய் குரலில் வெளியான விசில் போடு பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. அடுத்ததாக கபிலன் வைரமுத்து வரிகளில் விஜய் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பவதாரணியின் குரலுடன் உருவான சின்ன சின்ன கண்கள் பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக மூன்றாவது பாடலை கங்கை அமரன் எழுதி இருப்பதாக கூறியுள்ளார்.
கங்கை அமரன் வரிகளில்: வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களின் கங்கை அமரன் எழுதியுள்ளார். விஜய்க்காக கோட் படத்தில் தாறுமாறான குத்தாட்ட பாடலை தான் எழுதியிருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கங்கை அமரன் கூறியுள்ளார்.
வைரமுத்துவுக்கு எதிராக: பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு எதிராக தனது அண்ணன் இளையராஜாவை ஆதரித்து கங்கை அமரன் சமீபத்தில் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. தங்கள் குடும்பத்தினர் தயவால் தான் வைரமுத்து வளர்ந்தார். அவர் ஒரு நல்ல மனிதரே கிடையாது என விளாசினார். இந்நிலையில், கங்கை அமரனின் மகன் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடலை வைரமுத்துவின் மகன்களான மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ள நிலையில், அவர்களுக்கு போட்டியாக 3வது பாடலை கங்கை அமரனே எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவிலேயே 3வது பாடலையும் வெளியிட்டு விடுவார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











