Pongal race movies: பொங்கல் ரேஸில் இசை ஜாம்பவான்கள்.. 2025 துவக்கமே சும்மா அதிருதில்ல!
சென்னை: 2025ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் பொங்கல் ரிலீசாக அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. கடந்த ஆண்டில் இசையால் அதிர வைத்த படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்த நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இளையராஜா, ஏஆர் ரஹ்மான் படங்கள் பொங்கல் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளன.
யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் என அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களும் இந்த ஆண்டின் பொங்கல் ரேஸில் தங்களது படங்களை இணைக்கவுள்ளனர். பெரிய ஹீரோ படங்கள் இந்த பொங்கல் ரேஸில் இல்லாத நிலையில், இசையமைப்பாளர்களுக்கு இடையில் அதிக போட்டியை இந்த பொங்கல் பண்டிகை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

2025 பொங்கல் ரேஸ் படங்கள்: 2024ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2025ம் ஆண்டை கொண்டாட நாம் அனைவரும் தயாராகிவிட்டோம். கடந்த ஆண்டில் அதிகமான படங்கள் வெளியான நிலையிலும் சொல்லிக் கொள்ளும்படியாக இசையில் சிறப்பான படங்கள் அதிகமாக அமையவில்லை. அந்தக் குறையை 2025ம் ஆண்டு போக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ரிலீசாகவுள்ள சில படங்களின் பாடல்கள் கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், அவற்றின் சில பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை வசீகரித்துள்ளன. அந்த வகையில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களின் பாடல்களை சுட்டிக் காட்டலாம்.
இசை ஜாம்பவான்கள்: அந்த வகையில் இந்த ஆண்டின் பொங்கல் ரேஸில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா. ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் போட்டியிட உள்ளனர். இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகவுள்ளன. இளையராஜா இசையில் படைத்தலைவன், ஏஆர் ரஹ்மான் இசையில் காதலிக்க நேரமில்லை, ஜிவி பிரகாஷ் இசையில் வணங்கான், யுவன் சங்கர் ராஜா இசையில் நேசிப்பாயா, இமான் இசையில் 2 கே லவ் ஸ்டோரி, சாம் சிஎஸ் இசையில் மெட்ராஸ்காரன் என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் படங்கள் இந்த பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளன.
தள்ளிப்போன விடாமுயற்சி ரிலீஸ்: இவற்றில் நேசிப்பாயா, வணங்கான், காதலிக்க நேரமில்லை படங்கள் பாடல்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளன. தொடர்ந்து இந்தப் படங்களின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திரையரங்குகளில் சென்று இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியை என்ஜாய் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கல் ரிலீசாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து அந்தப்படம் விலகியுள்ளது.
இசையமைப்பாளர்கள் ஆதிக்கம்: இந்நிலையில் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த பொங்கலில் ரிலீசாகாத நிலையில், இளையராஜா, ஏஆர் ரஹ்மானின் ஆதிக்கம் பொங்கல் ரேஸ் படங்களில் உள்ளது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது. இளையராஜா தாலாட்டி தூங்க வைக்க முயலும் நிலையில், மற்ற இயக்குநர்கள் தூங்குபவர்களை தட்டி எழுப்பி கொண்டாட்டம் கொள்ள செய்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


Click it and Unblock the Notifications











