ஜோஜு ஜார்ஜுக்கு இவ்வளவு பெரிய மகளா?.. முத்த மழை பாட்டை எப்படி பாடுறாரு பாருங்க.. சீட் பெல்ட் தான் செம!
திருவனந்தபுரம்: தக் லைஃப் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ள ஜோஜு ஜார்ஜ் தனது குடும்பத்துடன் காரில் செல்லும் போது அவரது மகள் தக் லைஃப் படத்தில் இருந்து "முத்த மழை" பாடலை பாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்தையும், ஜோஜு ஜார்ஜின் மகளின் குரலையும் கேட்ட ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
மலையாள திரையுலகில் உதவி இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கிய ஜோஜு ஜார்ஜ், 1995ம் ஆண்டு வெளியான மாலவிழி கூடாரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 2015ல் வெளியான ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்திற்காக மாநில விருதை வென்றார்.

2019ம் ஆண்டு ஜோசப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் தட்டித்தூக்கினார். மனைவி மற்றும் 3 குழந்தைகள் என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜோஜு ஜார்ஜ் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
தனுஷ் படம் முதல் தக் லைஃப் வரை: தமிழில் ஜோஜு ஜார்ஜை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த 2021ம் ஆண்டு தனுஷை வைத்து இயக்கிய ஜகமே தந்திரம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். புத்தம் புது காலை விடியாதா, பஃபூன், ஆதிகேசவா படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்திலும் ஜோஜு ஜார்ஜுக்கு தரமான கதாபாத்திரத்தைக் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் மிரட்டியிருந்தார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் என்ன வித்தையை காட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கமல் பாராட்டிய இரட்ட: கடந்த 2023ம் ஆண்டு ரோகித் எம்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் முதன்முறையாக டபுள் ரோலில் ஜோஜு ஜார்ஜ் நடித்த 'இரட்ட' படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசனே பொறமைப்பட்டதாக தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாராட்டியிருந்தார். ஒரே போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாகவும் குடிகார கான்ஸ்டபிளாகவும் நடித்து கலக்கியிருப்பார் ஜோஜு ஜார்ஜ். கான்ஸ்டபிள் ஜோஜு ஜார்ஜின் மரணத்தை விசாரிக்கும் கதையில் கடைசியில் கிளைமேக்ஸில் காட்டப்படும் எதிர்பாராத ட்விஸ்ட் காட்சிகள் கண்களை குளமாக்கி விடும்.
இயக்குநர் அவதாரம்: உதவி இயக்குநராக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்த ஜோஜு ஜார்ஜுக்கு 47 வயதாகிறது. கடந்த ஆண்டு பணி படத்தை இயக்கி நடித்து இயக்குநராகவும் அறிமுகமானார். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட ஜோஜு ஜார்ஜின் மகளும் பாடல்கள் பாடுவதில் கெட்டிக்காரியாக உள்ளார்.
முத்தமழை பாடல் பாடிய ஜோஜு ஜார்ஜ் மகள்: முத்த மழை பாடல் ஏற்கனவே பாடகி தீ வெர்ஷன் பெஸ்ட்டா? அல்லது சின்மயி வெர்ஷன் பெஸ்ட்டா? என ரசிகர்கள் சண்டையிட்டு வரும் நிலையில், ஜோஜு ஜார்ஜ் மகள் வெர்ஷன் கேட்க இன்னமும் இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
குடும்பமே சீட் பெல்ட் போட்டு இருக்காங்க: நடிகர் ஜோஜு ஜார்ஜ் கடந்த 2008ம் ஆண்டு அபா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு அயன், சாரா மற்றும் இவான் என 2 ஆண் மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். காரில் செல்லும் போது மொத்த குடும்பமும் சீட் பெல்ட் அணிந்திருப்பதை நோட் பண்ணியும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











