கோச்சடையான் திரைப்பட இசை பிப்.15ல் வெளியாகிறது
ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கோச்சடையான்' இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கோச்சடையான்' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 வெளியாகவிருந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.
பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 'கோச்சடையான்' படமும் வெளியாகவில்லை.

பிப்ரவரியில் இசை
இந்நிலையில், 'கோச்சடையான்' படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் " 'கோச்சடையான்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இசை, பிப்ரவரி 15ம் தேதி வெளிவரும் என்று எங்களிடம் கூறியிருக்கிறது" என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது.

ஏப்ரலில் படம்
பொங்கலுக்கு வெளியீடு என்ற திட்டம் தள்ளிப் போனதால், தற்போது பிப்ரவரியில் இசை வெளியீடு முடிந்து, படத்தை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான்
கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சோபனா, சரத்குமார், ருக்மணி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

3டி அனிமேசன்
நாட்டில் முதன்முறையாக 3டி அனிமேசன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் (மேற்பார்வை) ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமார் ஏற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











