கவிஞர் வைரமுத்துவின் நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான இனியவன் காலமானார்.. சோகத்தில் இசையுலகம்
சென்னை: இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்துவின் கவிதைகளை இசை பாடல்களாக மாற்றி மக்களிடத்தில் கொண்டு சென்றவர் இசையமைப்பாளர் இனியவன்.
அவரது மரணத்தால் மிகவும் மனம் வாடிய பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான இரங்கல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்
தமிழ் சினிமாவின் திறமையான இசையமைப்பாளரான இனியவன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு இசை உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் இனியவனின் மறைவை அறிந்த திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து அதிர்ச்சி
"இசை அமைப்பாளர் இனியவன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மிகச்சிறந்த இசை அமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையைக் கலக்கியிருப்பார்.

தலைவர் பிரபாகரனுக்கு பிடிக்கும்
'கவுரி மனோகரி' படத்தில் கே.ஜே.ஜேசுதாசும் - எஸ்.பி.பியும் இணைந்து பாடிய "அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது" பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த பாடல் அது என்று ஒரு ஈழ நண்பர் என்னிடம் சொன்னார். எனது 'ஜென்மம் நிறைந்தது' பாடலுக்கும் இசை இவரே.

5 நாட்களுக்கு முன்பு கூட பேசினோம்
ஐந்து நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். 'ஓடங்கள்' பட இசை அமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து அவர் மூலம் தனக்கு அறிமுகம் ஆனவர். நீண்ட கால நண்பர். இவரது உடல் சொந்த ஊரான தஞ்சைப் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்
வைரமுத்துவின் உருக்கமான இந்த பதிவை பார்த்து இசையமைப்பாளர் இனியவன் காலமான செய்தியை அறிந்த சினிமா பிரபலங்களும் இசை ரசிகர்களும் திறமையான இசையமைப்பாளர் இனியவனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











