‘மணல் நகரம்’ ஆடியோ ரிலீஸ்... 34 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட 'ஒருதலை ராகம்' படக்குழு!
சென்னை: 'ஒருதலை ராகம்' படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகர் சங்கர். தமிழ், மலையாளம் என்று 120க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
'ஒருதலை ராகம்' சங்கர் என அறியப்பட்ட இவர் தமிழில் இயக்கியுள்ள படம் 'மணல் நகரம்' இவர் ஏற்கெனவே மலையாளத்தில் படம் இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க துயாயில் உருவாகியுள்ள இப்படத்தை டிஜெஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கிருஷ்ணா, ப்ரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி, சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ரெனில் கௌதம் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர். வசனம் ஆர்.வேலுமணி.
இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. இந்த விழாவில் தான் அறிமுகமான ஒரு தலை ராகம் படக்குழுவினரை அழைத்திருந்தார் சங்கர்.
கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குழு சந்தித்துக் கொண்டது சுவாரஸ்ய நிகழ்வாக அமைந்திருந்தது.

ஒரு தலை ராகம்...
அதன்படி இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா,நடிகர்கள் தியாகு,தும்பு கைலாஷ், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன் ,பி.ஆர்.ஓ.டைமண்ட் பாபு என ஒருதலைராகம் படக்குழுவினர் மேடையை அலங்கரித்தனர்.

ஆடியோ ரிலீஸ்...
'மணல் நகரம்'ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட்டார் ரூபா பெற்றுக் கொண்டார்.

மலரும் நினைவுகள்....
விழாவில் பேசிய பலரும் 'ஒருதலை ராகம்' படம் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

34 ஆண்டுகள்...
விழா தொடர்பாக மணல் நகரம் படத்தின் இயக்குநரான ‘ஒரு தலை ராகம்' சங்கர் பேசும்போது ''நான்'ஒருதலை ராகம்' படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் நான் 'ஒருதலை ராகம்'சங்கர் தான். அந்தப்படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

முகவரி தந்த படம்...
அது என்னை சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன்.

ரூபாவின் வருகை...
நான் அன்று படத்தில் ரூபாவிடம் பேசியிருந்தால் படமே இல்லை. ஆனால், இன்று ஹைதராபாத்தியிருந்து இதற்காக ரூபா வந்திருக்கிறார்.

தயாரிப்பாளாரின் ஊக்கம்...
'மணல் நகரம்' கதையை கேட்டவுடன் துபாயில் பல நாட்கள் எடுக்க வேண்டும் என்று பயந்து கைவிட்டு விடலாம் என்றேன். வேறு கதை செய்யலாம் என்ற போது தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார் பிடிவாதமாக இருந்து ஊக்கம் கொடுத்தார். அதனால்தான் துபாயில் 62 நாட்கள் எடுக்க முடிந்தது." என்றார்.

இப்படிக் கூப்பிடலாமா...?
அதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நடிகருமான (ராபர்ட்) ராஜசேகர் பேசும்போது.. "உன்னை ராஜேந்திரன் என்று அழைக்கலாமா?'' என்று டி.ராஜேந்தரிடம் கேட்டார். அவர் ஆமோதித்தார்.

சரித்திரம்...
'' இன்று எங்களை இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி. 'ஒருதலை ராகம்' படம ஒரு சரித்திரம் இதற்கு முன்னும் வர வில்லை.இதற்குப் பின்னும் இனி வர முடியாது. அதன் வித்து ராஜேந்தர் .விதைத்தது ராஜேந்தர்.

70 பாடல்கள்...
நான் சந்தித்த ஜினியஸ்களில் ராஜேந்தர் ஒருவர். 'ஒருதலை ராகம்' படத்தில் 70 பாடல்கள் போட்டுக் காட்டினார். படத்தில் 7 பாடல்கள் தான் வரும். படத்தில் ரூபா பேசவில்லை.

ஜோல்னாப் பை பாதிப்பு...
கண்ணாலேயே நடித்து இருப்பார். தியாகு என் தம்பி போன்றவர். தும்பு கைலாஷ் கேரக்டரின் பாதிப்பு அவரது ஜோல்னாபை,கண்ணாடி பாதிப்பு அப்போது பலருக்கும் இருந்தது. இந்த 'மணல் நகரம்' பாடல் காட்சிகள் க்ளாஸாக இருக்கிறது. மாஸாக இருக்கிறது.சங்கருக்கு வாழ்த்துக்கள்!'' எனப் பேசினார்.


Click it and Unblock the Notifications











